கவுண்டமணியின் 81வது பிறந்தநாள் ; டகால்டி மன்னன் 'கவுண்ட்டர்' மணி

May 25, 2020 06:20 PM 2116

தமிழ் திரையுலகில், தனக்கென நிரந்தரமான தனி இடத்தை வைத்திருக்கும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் 81 வது பிறந்தநாள் இன்று. ஆல் இன் ஆல் அழகுராஜா நக்கல், நையாண்டி, எகத்தாளம், ஏடாகூடம், மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் அப்படியே வெளிப்படுத்தும் தைரியம், இவற்றின் மொத்த உருவமே கவுண்டமணி. சிரிக்க வைப்பது மட்டும் நம் வேலையல்ல, கூடவே சிந்திக்க வைப்பதும் நம் வேலைதான் என்று களமிறங்கி கவுண்டமணி, "உங்களயெல்லாம் திருத்துறது என் வேலை இல்ல" என்று ஒரு காட்சியில் சொல்வார். உண்மையில் அவர் யாரையும் திருத்த முயற்சிக்கவில்லை. வேணும்னா நீங்களே திருந்துங்கடா என்றுதான் சொல்லியிருக்கிறார்.

image

தமிழ் சமூகத்தில், குடும்பம் என்ற பெயரில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் வன்முறையை அவர் பாணியில் எடுத்து சொல்லியிருக்கிறார். " கல்யாணம் ஆன ஒரு ஆம்பள... எப்போதாண்டா பொண்டாட்டிய அடிக்கிறது" என்று துடியாய்த் துடிக்கும் கவுண்டமணி, மனைவியை அடிப்பவன் தான் அடிப்படையில் கணவன் என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பார். அதேபோல் மற்றொரு நகைச்சுவைக் காட்சியில் " நான் தொட்டு தாலி கட்டிட்டனே" என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும்போது.. " தாலிதானடா கட்டுன, தாமிரபரணி ஆத்துல டேமா கட்டுன" என்பார்.

image

 

கவுண்டமணியின் நக்கலும் நையாண்டியும் அவர் ரத்தத்தில் ஊறியவை. அது, அவர் பிறந்த கோயம்புத்தூரின் வல்லகுண்டாபுரத்திலிருந்து பெற்றுவந்த வரதட்சணை. சூரியன் படத்தில் போலீஸ் ஸ்டேஷனில் மாட்டியிருக்கும் காந்தியின் படத்தைப் பார்த்து, அவர் எழுதிய புத்தகத்தின் தலைப்பான சத்தியசோதனையையே தனக்கு ஏற்பட்ட சங்கடத்தை வெளிப்படுத்த பயன்படுத்துவதெல்லாம் அவர் ரிச் மெட்டீரியல் என உணர வைக்கும். நூறு வயது வரை வாழ வேண்டுமென்று வைத்தியர் விஷமுறுக்கி வேலுச்சாமியிடம் ஒருவர் கேட்கும்போது, தண்ணிகின்னி, பொம்பள கிம்பள என்று வரிசையா கேட்டுவிட்டு, நீ எதுக்கு நூறு வருஷம் வாழவேண்டுமென்று திட்டுவார். உண்மையிலேயே ஒருவன் தவறான பழக்கங்களோடு இருப்பதற்குத்தான் அதிக நாட்கள் வாழவேண்டும் என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. எப்போதும் மகிழ்ச்சியாய் இருந்து பிறரையும் மகிழ்விக்க வேண்டும் என சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம்.

 

image

கவுண்டமணியின் ஒவ்வொரு பஞ்ச் வசனத்தையும் நாம் அனுதினமும் சந்திக்கும் பலருக்கு டெடிகேட் செய்யலாம். சிலரைப் பார்த்தால் " ஐயய்யோ இன்று கவலைப்படுவதற்கு காரணமே இல்லையே" என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த நபர்களுக்காகத்தான் அவர் வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் " ஏண்டா எப்பப் பார்த்தாலும் எருமை சாணிய மூஞ்சில அப்புன மாதிரியே திரியுற" என்று கேட்டார். "யோவ் தீஞ்ச மண்ட தர்மம் பண்ணு.. இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜா வேணும்கிறது. டேய் இந்த டகால்டி வேலைலா என்கிட்ட வச்சிக்காத.. என, பஞ்ச் வசனங்களுக்கு பஞ்சம் வைக்காத மனிதர். சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் டிரைவராக துவங்கிய கவுண்டமணியின் நடிப்பு, பாரதிராஜாவின் பதினாறு வயதிலே திரைப்படத்திலிருந்துதான் பேசப்பட்டது. குறிப்பாக " பத்த வச்சிடியே பரட்ட" என்ற வசனம். அந்த வசனத்தை அவர் வெளிப்படுத்தும் தொணியைப் பார்க்கும்போதே, இவர் ஏதோ பெரிதாக பத்த வைக்கப் போகிறார் எனத் தோன்றும்.

image

 

இப்போது அவரை நேரில் சந்தித்து "பத்த வச்சிட்டியே பரட்ட என்று பேசிய போதே எங்களுக்குத் தெரியும். தமிழ்சினிமாவுல பெருசா நகைச்சுவைத் தீயை பற்ற வைப்பீங்கன்னு" என்று பாராட்டினால். "ஆமா... நான் பத்த வச்சேன்...இப்போ கண்டவனெல்லாம் வந்து தண்ணி ஊத்தி அணைக்கிறானுங்கடா" என தமிழ் சினிமாவில் ஏற்பட்டிருக்கும் நகைச்சுவை வறட்சியை குறிப்பிடுவார். அதுதான் கவுண்டமணி. தமிழ் சினிமாவின் லாரல் ஹார்டியாக கவுண்டமணியும் செந்திலும் கொண்டாடப்பட்ட பின்னர், செந்தில் இல்லை என்றால் கவுண்டமணி இல்லை என்ற பேச்சு இருந்தது. அவர்களின் கூட்டணி பெரிய அளவில் வெற்றிபெற்றதற்கு செந்தில் முக்கியமான காரணம் என்பது உண்மைதான் என்றாலும், அதன்பிறகு, முறைமாமன், மன்னன், பாபா என பல திரைப்படங்களில் தனியாக நடித்தும் கோலோச்சினார் கவுண்டமணி. 12 திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த அவருக்கு, அந்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறாமல் போனதும் ஒருவகையில் நமக்கு நல்லதுதான். இல்லை என்றால், நம் உணர்விலும் அன்றாட வாழ்விலும் கலந்துபோன அவரின் நகைச்சுவை கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. பன்னிக்குட்டி ராமசாமி, ஐடியா மணி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ((செல்லப்பா, ஆசாரி, ஒண்டிப்புலி, சூப்பர்வைசர் சுப்பிரமணி, சில்வர் ஸ்பூன் ஷில்பா குமார்,)) குண்டலகேசி என, நினைவில் நீங்காத கதாபாத்திரங்களைக் கொடுத்துள்ள கவுண்டமணிக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

image

Comment

Successfully posted