தஞ்சையில் ஒரு சந்திரமுகி பங்களா - பேய் பீதியால் பொலிவிழந்த வீடு!

Sep 04, 2020 10:04 AM 2081

நீளமான வெள்ளை நிறப் பாம்பு, வீட்டிற்குள் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை என பல அதிர்ச்சிகளால் தஞ்சையில்15 வருடங்களாக ஒரு வீடு பயன்படுத்தப்படாமலே இருக்கிறது. அப்படி என்னதான் நடந்தது? இப்போது பார்க்கலாம்.

எங்கு பார்த்தாலும் ஓட்டை, வீட்டிற்குள் பாம்பு போல நெளியும் ஆலமர விழுதுகள், உடைந்த கண்ணாடிகள் என பார்ப்பதற்கு பேய்வீடு போலவே காட்சியளிக்கும் இந்த வீடு, எப்போதும் பரபரப்பாக இருக்கும் தஞ்சை தெற்கு வீதியின் இந்து அறநிலையத்துறை குடியிருப்பில் அமைந்துள்ளது. அங்கு இருக்கும் இந்த வீட்டில்தான் அறநிலையத்துறை இணை ஆணையராக பணியாற்றிய ராஜமாணிக்கம் என்பவர் 2002 ஆம் ஆண்டு குடியிருந்துள்ளார். அவரின் மனைவி ஒரு விபத்தில் இறந்துபோனதும் ராஜமாணிக்கம் வீட்டை காலி செய்துவிட்டார்.

பின்னாளில் வந்த அதிகாரிகளும் அது ராசி இல்லாத வீடு எனக் கூறி அங்கு தங்கவில்லை. சுமார்15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆள் அரவமற்று இருக்கும் அந்த வீட்டில், பேய் இருப்பதாகவும், வெள்ளை நிற நீளமான பாம்பு ஒன்று இருப்பதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் ஊருக்குள் கதை பேசப்படுகிறது.

இப்படி சந்திரமுகி பங்களா போல அடுத்தடுத்து கட்டிவைக்கப்பட்டுள்ள மர்ம முடிச்சுகளால், அந்த வீட்டிற்கு செல்ல பலரும் அஞ்சுகிறார்கள். ஆனால், அதனை பயன்படுத்தி தனி நபர் ஒருவர் வைக்கோல்போர் போட்டு ஆக்கிரமித்துள்ளதாகவும், அறநிலையத்துறைக்கு சொந்தமான அந்த வீட்டை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அப்பகுதி சமூக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted