அண்ணா பல்கலை உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை - அமைச்சர்

Oct 16, 2020 03:54 PM 369

அண்ணா பல்கலைகழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் புதிய மின்சார அலுவலகக் கட்டடம் மற்றும் பள்ளிக் கட்டட அலுவலகங்களை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக கூறினார். உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கினால் மாணவர்களுக்கான 69 சதவீத இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும் எனவும், கல்வி கட்டணம் அதிகரிக்கும் எனவும் அமைச்சர் விளக்கம் அளித்தார். சிறப்பு அந்தஸ்தால், என்ன சலுகைகள் கிடைக்குமோ, அதை மாநில அரசால் செய்ய முடியும் எனவும், இடஒதுக்கீடு பாதிப்பு மற்றும் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு துணை போகாது எனவும் அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து பெற்றால், நுழைவுத்தேர்வுகள் வைக்கப்பட்டு, வடமாநில மாணவர்கள் அதிகளவில் சேர்க்கப்படும் சூழல் ஏற்பட்டு, தமிழக மாணவர்கள் பாதிகப்படுவார்கள் எனவும் அமைச்சர் கூறினார். தமிழக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்ட கூடாது என்பதற்காகவே உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்ற முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதாகவும், இதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அமைச்சர் உறுதிபட தெரிவித்தார்.

Comment

Successfully posted