சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற தேர்வில் தோல்வியடைந்த 3.02 லட்சம் மாணவ மாணவியர் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தனர். இவர்களில் 73 ஆயிரத்து 733 பேர் தேர்ச்சி பெற்றனர். 16 ஆயிரத்து 636 பேர் கூடுதல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் நடந்த முறைகேடு குறித்து மீனா என்ற மாணவி அளித்த புகாரின் பேரில் ஊழல் தடுப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக முறைகேடுகள் அனைத்திற்கும் பதிவாளர் கனேசன் தான் காரணம் என பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே கனேசனை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி ஆளுநர், துணை வேந்தருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.