களக்காடு அருகே குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி: போலி சாமியார் உட்பட 3 பேர் கைது!

Aug 04, 2020 08:09 AM 733

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற போலி சாமியார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கிழசடையமான்குளத்தை சேர்ந்தவர் குமரேசன் . கூலி தொழிலாளியான இவரது மனைவியின் பெயர் ராமலட்சுமி . இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். குமரேசனின் நண்பர் டோனாவூரை சேர்ந்த கிரானராஜன் ஒரு போலி சாமியாராவார். கிரானராஜன் , குமரேசனின் வீட்டில் புதையல் உள்ளதாகவும், அதன் மதிப்பு கோடிக்கணக்கான ரூபாய் எனவும் கூறியுள்ளார். புதையலை எடுக்க பூஜை செய்ய வேண்டும் எனவும், அதற்கு 1 லட்சத்து 10 ஆயிரம் ஆகும் என்றும் கூறி உள்ளார். இதை உண்மை என்று நம்பிய குமரேசன் இதனை தனது தாயாரான பார்வதியிடம் கூறி உள்ளார்.

அவரும் உடனடியாக 1 லட்சத்து, 10 ஆயிரத்தை கிரான ராஜனிடம் கொடுத்துள்ளார். இதனைதொடர்ந்து நேற்று இரவில் குமரேசன் வீட்டில் கிரான ராஜன் பூஜை நடத்தி உள்ளார். வீட்டின் நடுவே 3 அடி நீளத்திலும், 2 அடி அகலத்திலும் 5 அடி ஆழத்திலும் குழி தோண்டியுள்ளனர். அதில் முதலில் கோழியை பலி கொடுத்துள்ளனர். அதனைதொடர்ந்து ஒரு பூனையை பலி கொடுக்க அதனை வெட்ட முயன்ற போது பூனை தப்பி ஓடி விட்டது.

இதனால் பூஜையை நிறுத்திய கிரான ராஜன் இனி அடுத்த செவ்வாய் கிழமை பூஜையை தொடரலாம் என்று கூறி விட்டு , மேலும் பூனை தப்பி விட்டதால் உனது மகன்களில் ஒருவனை பலி கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினரும், உறவினர்களும் குமரேசன் வீட்டிற்கு வந்தனர். அங்கு இவர்கள் நரபலி கொடுப்பது பற்றி பேசிக் கொண்டிருந்ததை கேட்டதால் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் செய்தனர். உடனடியாக களக்காடு இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் பார்வதி, அவரது மகன் குமரேசன் மற்றும் போலி சாமியார் கிராணராஜன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Comment

Successfully posted