மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!!

Aug 07, 2020 03:02 PM 1034

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

சிவில் நீதிமன்றத்தில் 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வேதா இல்லம் அரசுடமையாக்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் சார்பில், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இழப்பீடு நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்க வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரம் இல்லை எனவும், வேதா நிலையத்தில் உள்ள அசையும் சொத்துக்களை கையகப்படுத்தத் தடைவிதிக்கக் கோரியும் தீபா தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்கமறுத்த நீதிபதி, ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எங்கு இருந்தீர்கள் எனக் கேள்வி எழுப்பி, வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்து உத்தரவிட்டார். ஏற்கனவே வேதா இல்லத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீபாவின் தம்பி தீபக் தொடர்ந்த வழக்கும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted