முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அறிக்கை!

Dec 01, 2020 07:14 PM 818

டிசம்பர் 4ம் தேதி வரை சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால், தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில், அனைத்து துறை அதிகாரிகளும், பாதிப்பிற்குள்ளாகும் இடங்களில் முகாமிட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மீட்புக் குழுவினர் அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ள முதலமைச்சர், பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் மதுரையில் 9 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக முகாம்களுக்கு அழைத்து செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார். நோய் தொற்று ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொள்ள வேண்டுமெனவும், நீர்நிலைகளில் நீர் கொள்ளளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 4ம் தேதி வரை சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால், தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமென முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். அண்டை மாநிலத்தின் கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள், அந்தந்த மாநிலங்களின் கரையை அடைய அனுமதிக்குமாறு, தொடர்புடைய மாநில அரசுகளிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் புயல் குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் முதலமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Comment

Successfully posted