சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் வேகமாக பரவும் கொரோனா

Feb 25, 2020 03:37 PM 477

சீனாவை தொடர்ந்து தென்கொரியாவிலும்  கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. பாதுகாப்பு முகமூடிகளை வாங்குவதற்காக பொதுமக்கள் வரிசையில் நிற்கும் காட்சி இணையத்தில் அதிகமாக பகிரபட்டு வருகிறது. என்னதான் நடக்கிறது தென்கொரியாவில்? விரிவாக காண்போம் இந்தத் தொகுப்பில்...

சீனாவை தொடர்ந்து தென்கொரியாவிலும்  கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் பரவிய கொரோனா வைரஸ், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

சீனாவை தொடர்ந்து தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும், கொரோனா  வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக  தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை, 800 க்கும் அதிகமானோருக்கு  கொரோனா பாதிப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தென் கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். தென்கொரியாவின் டேகு நகரில் தான், கொரோனா வைரஸ் நோய்க்கு அதிகம் பாதிப்பட்டுள்ளனர். வைரஸ் வேகமாக பரவுவதால், தென் கொரியாவில் நடக்க இருந்த  சர்வதேச கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் முகமூடிகளை வாங்குவதற்காக நீண்ட தூரத்துக்கு பொதுமக்கள் வரிசையில் நிற்கும் நிலைக்‍கு தள்ளப்பட்டுள்ளனர். மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளதால், தென் கொரியா முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. கொரோனா வைரஸ், சீனாவுக்கு அடுத்தபடியாக தென் கொரியாவில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted