ஐ.பி.எல் லீக் ஆட்டம் - ஐதராபாத் அணியை வீழ்த்தியது டெல்லி அணி

Sep 23, 2021 08:21 AM 1672

ஐ.பி.எல் தொடரின் 33வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீழ்த்தியது.

துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் வார்னர் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். சீரான இடைவெளியில் அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டானதால், ஐதராபாத் அணியால் ரன் குவிக்க முடியாமல் போனது இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, நேர்த்தியான ஆட்டத்தை வெளிபடுத்தியது. பிர்த்திவி ஷா 11 ரன்களில் வெளியேறியானலும், அதன் பின் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் - ஸ்ரேயாஸ் ஐயர் இணை ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஷிகர் தவான் 42 ரன்களில் வெளியேற, கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். ஸ்ரேயாஸ் ஐயர் 47 ரன்கள் எடுத்து சிறப்பான பங்களிப்பு அளிக்க, டெல்லி 17 புள்ளி 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில், 14 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐ.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அபு தாபி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.’’

Comment

Successfully posted