கேரள சுற்றுலாத் தலங்களில் நாய் கடிக்கு சிகிச்சை பெறும் பொதுமக்கள்

Dec 07, 2019 09:08 PM 644

சுற்றுலா செல்பவர்கள் வெளியூர்களில் பிரச்சனையை சந்திப்பது தவிர்க்க முடியாத ஒன்று. மொழி, தங்குமிடம், வழிகாட்டிகள் என்று ஏதாவது ஒரு பிரச்சனை தான் இருக்கும். ஆனால் கேரளா செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஒரு வித்தியாசமான பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்

கேரளாவில் தெரு நாய்களின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மூணாறு, தேக்கடி,வாகமண் போன்ற இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில் தெரு நாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வலிறுத்தியுள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் அமைச்சர் ஏசி மொய்தீன் அறிவுறுத்தியுள்ளார்.

கேரளாவில் இந்தாண்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என சுமார் 1லட்சத்து 34 ஆயிரத்து 253 பேர் தெரு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு கிகிச்சை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடவுளின் பூமி என்று அழைக்கப்படும் கேரளாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் சுற்றுலா செல்கின்றனர். இந்நிலையில் தெரு நாய் பிரச்சனையால் கேரளா ‍ செல்லும் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

Comment

Successfully posted