மக்கள் நலன் கருதி, மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டதில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

Jun 18, 2020 04:59 PM 5771

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலன் கருதி இதுவரை ஒரு அறிவிப்பு கூட வெளியிட்டதில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்ட வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைப்புசாரா கட்டட பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், விட்டமின் மாத்திரைகள் மற்றும் கப சுர குடிநீர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, மதுரை மாவட்டத்துக்கு வெளியூரில் வந்தவர்களில் 11 ஆயிரத்து 16 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உயிரைப் பணயம் வைத்து பணிபுரிவதாகவும் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசைக் குறை சொல்லும் வகையில் மட்டுமே அறிக்கை விடுகிறாரே தவிர, மக்கள் நலன்கருதி அறிக்கை வெளியிட்டதில்லை எனக் குற்றம் சாட்டினார்.

Comment

Successfully posted