ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்!

Jul 08, 2020 07:40 PM 4814

சவாலை ஏற்காமல் தரம்தாழ்ந்த வகையில், மற்றவர்கள் மூலம் அறிக்கை வெளியிடுவதை மு.க.ஸ்டாலின் தவிர்ப்பது நல்லது என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சவாலுக்கு உரிய பதில் சொல்ல முடியாத ஸ்டாலின், நேருவை வைத்து தரம்தாழ்ந்த விதத்தில் அறிக்கை வெளியிட்டிருப்பதாக விமர்சித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சிறப்பான முயற்சியால், உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையின் ஒருங்கிணைந்த திட்டமிட்ட பணிகளால் கொரோனா பரவல் குறைந்து வருவதாகத் உதயகுமார் தெரிவித்துள்ளார். இதனால், அரசுக்கு நற்பெயர் வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மக்களை திசைதிருப்ப ஆதாரமற்ற குழப்ப அறிக்கைகளை வெளியிடுவதையே ஸ்டாலின் வாடிக்கையாக வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளாட்சித்துறையில், 123 தேசிய விருதுகளைப் பெற்றுத் தந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை விமர்சிக்கும் அருகதை ஸ்டாலினுக்கும் கிடையாது, கே.என்.நேருவுக்கும் கிடையாது என்றும் விமர்சித்துள்ளார். ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித்துறையில் அவர் ஆற்றிய சாதனைகள் குறித்து, அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன் துண்டுச்சீட்டு துணையில்லாமல் விவாதிக்கும் தைரியம் இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். திறமை வாய்ந்த ஒரு நேர்மையான தலைமை பொறியாளரின் நல்நோக்க நியமனத்தை கொச்சைப்படுத்த முயற்சித்திருப்பது, தான் திருடி பிறரை நம்பான் என்பதையே காட்டுவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். அப்படிப்பார்த்தால், பேரறிஞர் அண்ணா தொடங்கிய தி.மு.க.வை இன்று ஸ்டாலின் வழிநடத்துவதற்கு அருகதை இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ரகசிய சிகிச்சைக்கு லண்டனும், சிகை அலங்காரம் செய்துகொள்ள தாய்லாந்துக்கும் பறக்கும் செயல், ஏழைகளுக்கு மட்டுமல்ல எதற்கும் உதவாத குரோட்டன்ஸ் செடி என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

 

Comment

Successfully posted