"நாய் சேகர்" திரை விமர்சனம்

Jan 13, 2022 10:27 PM 4885

காமெடி நடிகர் சதிஷ் ஹீரோவாகவும், ‘குக் வித் கோமாளி’ புகழ், பவித்ரா ஹீரோயினாகவும் அறிமுகமாகியுள்ள படம் ‘நாய் சேகர்.’ அதேபோல் கிஷோர் ராஜ்குமாரும் இந்தப் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

பிரம்மாண்டமான படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற ஏஜிஎஸ் நிறுவனம் ‘நாய் சேகர்’ படத்தையும் தயாரித்துள்ளது. மொத்தமாக புதிய கூட்டணியில் பொங்கல் பண்டிகையில் களமிறங்கியுள்ள ‘நாய் சேகர்’ ரசிகர்களை சிரிக்க வைக்கத் தவறவில்லை.

நாய் மனிதனாகவும், மனிதன் நாயாகவும் மாறினால் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கு திரையில் வடிவம் கொடுக்கும் படம் தான் ‘நாய் சேகர்.’ சதிஷ் எதிர்பாராமல் நாயின் குணாதிசயங்களுடன் சில நாட்கள் வாழவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

அதேபோல் மிர்ச்சி சிவாவின் பின்னணி குரலோடு நாய் ஒன்றும் அவருடன் பயணிக்கிறது. இதன் நடுவில் சதிஷ் தனது குடும்பம், ஐடி கம்பெனி வேலை, பவித்ராவுடனான காதல், நாய் கடத்தல் கும்பல், சிலைகளை கடத்தும் சிரிப்பு வில்லனாக 80’S ஸ்பெஷல் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இவர்களுடன் இந்த பஞ்சாயத்துக்கெல்லாம் காரணமான சயின்டிஸ்ட் ஜார்ஜ் மரியான் இவங்க எல்லாரையும் எப்படி சமாளிக்குறார்ன்னு காமெடியா சொல்லிருக்காங்க.

‘லாஜிக் பார்க்க வேண்டாம்’ என டைட்டில் கார்டிலேயே இயக்குநர் சொல்லிவிட்டதால் அதற்கு இங்கே இடமே இல்லை. ஆனாலும், முதல் பாதியில் மட்டும் திரைக்கதையின் வேகத்துடன் சில குறைகளும் எட்டிப் பார்க்கின்றன.

மற்றபடி ரசிகர்களை சிரிக்க வைப்பது மட்டுமே தங்களது நோக்கம் என மொத்த படக்குழுவினரும் தீயா வேலை செஞ்சிருக்காங்க. குறிப்பாக பழைய பாடல்கள் பாடிக்கொண்டே சிரிப்பு வில்லனாக மிரட்டும் சங்கர் கணேஷ், அவரை கலாய்க்கும் மாறன் காம்போ அசத்தல்.

படத்தில் சதிஷ் ஹீரோ என்றாலும், ஹீரோயிசம் இல்லாத பாத்திரத்தில் காமெடியை மட்டுமே துணையாகக் கொண்டு களத்தில் நின்று விளையாடுகிறார்.

அனிருத் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள சிங்கிள் டிராக்கிலும் அட்டகாசமாக டான்ஸ் ஆடி ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார். சதிஷ் நாயின் குணாதிசயங்களால் கஷ்டப்படும் காட்சிகளில், அவருக்கு நடிக்க நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

அதேபோல் பவித்ராவும் அவரது பாத்திரத்தின் தன்மையறிந்து முடிந்தளவு சிறப்புச் செய்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் இன்னும் கவனம் செலுத்தினால், நிச்சயமாக கோலிவுட்டில் பெரிய ரவுண்ட் வரலாம்.

திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால், கு. ஞானசம்பந்தம், மனோபாலா, ஸ்ரீமன், லிவிங்ஸ்டன், இளவரசு ஆகியோரின் பாத்திரங்கள் இன்னும் நன்றாக வந்திருக்கும்.

இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் உள்ளிட்ட அவரது குழுவிற்கு அசத்தலான பொங்கல் வெற்றியாக ‘நாய் சேகர்’ அமைந்துள்ளது. குழந்தைகளும் இந்தப் படத்தை கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

- அப்துல் ரஹ்மான்.

Comment

Successfully posted