திருமண வீட்டில் திருடப்பட்ட நூதன பொருள்

Dec 10, 2019 03:27 PM 466

சமையலில் முக்கிய இடத்தை பிடித்த வெங்காயத்தின் விலை தற்போது உயர்ந்து கொண்டிருக்கிறது. வெங்காயத்தை உரிக்காமலேயே குடும்ப பெண்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்துவிடும் வகையில் விலை உயர்வு உள்ளது. இந்நிலையில் திருமண வீட்டில் முதியவர் ஒருவர் வெங்காயத்தை திருடிய சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நேற்று முன்தினம் திருமண நிகழ்ச்சி நடந்தது. அப்போது, மதிய உணவு சமைத்துக் கொண்டிருந்த போது, திருமண வீட்டார் போல் நடித்து சமையல் அறைக்கு வந்த முதியவர் ஒருவர், சமையல் வேலைகளை கண்காணித்தார். பின்னர், சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த பல்லாரி, வெங்காயம் ஆகியவற்றை பையில் போட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றார்.

இதைப் பார்த்த சமையல்காரர் இது குறித்து திருமண வீட்டாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, முதியவரை மடக்கிப் பிடித்த திருமண வீட்டார், அவரிடம் இருந்த பல்லாரி, வெங்காயத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, முதியவரை வெளியேற்றினர்.

எப்போதும், திருமணம் நிகழ்ச்சியில் தங்க நகைகள், பணம், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டு வந்த நிலையில் முதல்முறையாக வெங்காயம் திருடப்பட்ட சம்பவம் வேடிக்கையாக இருக்கிறது.

Comment

Successfully posted