ஆஸ்திரேலியாவில் மீண்டும் துளிர்விடும் இலைகள் : இணையத்தில் வைரல்

Jan 14, 2020 10:36 AM 1652


ஆஸ்திரேலியாவில், பற்றி எரிந்த காட்டுத்தீயில் சிக்கி அணைந்த மரங்களின் கிளைகளிலும் தற்போது செடிகள் துளிர்விடத் தொடங்கியுள்ளன. இந்தப் புகைப்படங்கள் பெரும் வைரலாகிவருகின்றன.மீண்டும் துளிர்விடும் ஆஸ்திரேலியா பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.

 

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால், அந்நாட்டின் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதித்தது. இதுவரை 6.3 மில்லியன் ஹெக்டேர் அளவிலான காடுகள் தீயில்  கருகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கங்காரு, கோலா கரடி போன்ற பல தனித்துவமானவிலங்குகளின் சாம்ராஜ்ஜியமாக இருக்கின்றது ஆஸ்திரேலியா. ஆனால், இந்த காட்டுத்தீயினால் மட்டும் இதுவரை கோடிக்கணக்கான விலங்குகள் உயிரிழந்திருக்கக்கூடும் என வனவிலங்கு ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

காட்டுதீயால், ஆஸ்திரேலியா மிகுந்த கஷ்டங்களைச் சந்தித்து வந்தது. தீயின் கோரத்தினால், நியூ சௌத் வேல்ஸ் நகரத்தின் வானம் முழுவதும் செந்நிறமாகக் காட்சியளித்தது. சாலையின் இரு புறங்களிலும் கருகிய நிலையிலான விலங்குகளின் உடல்கள் அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்ணீரை வரவழைத்தது. இதனால் மொத்த உலகமும் ஆஸ்திரேலியாவுக்காகப் பிரார்த்தனை செய்தது.

இவர்களின் பிரார்த்தனைக்குப் பலன் கிடைக்கும் விதமாகத் தற்போது, ஒரு நிகழ்வு நடந்துள்ளது. நியூ சௌத் வேல்ஸின் குல்நூரா என்ற பகுதியில், தீயால் பாதிக்கப்பட்ட தனது வீட்டின் தற்போதைய நிலையைப் பார்ப்பதற்காக முரே லோவி என்ற உள்ளூர் புகைப்படக் கலைஞர் சென்றுள்ளார். தன் வீட்டுக்கு அருகே உள்ள காட்டில், அவர் கண்ட அற்புத காட்சியை அப்படியே படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மூன்று மாதங்களாக சோகத்தில் மூழ்கியிருந்த ஆஸ்திரேலியர்கள் மட்டுமல்லாது உலக மக்களுக்கும் புது நம்பிக்கையை அளிக்கும் வகையில் அந்தப் புகைப்படங்கள் உள்ளன. கருமையான எரிந்த மரங்களுக்கு நடுவே, பச்சைப் புற்கள் மற்றும் ரோஸ் நிறத்திலான இலைகள் துளிர்விடத் தொடங்கியுள்ளன. இதைதான் முரே படம் பிடித்துள்ளார். இது ஒரு புறம் என்றால், மற்றொரு புறம் மகிழ்வான சம்பவமும் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவில், தீயினால் பாதிக்கப்பட்டு பல கோடி விலங்குகள் உயிரிழந்திருந்தாலும், இன்னும் கோடிக்கணக்கிலான விலங்குகள் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்வதற்காக ஏங்கி நிற்கின்றன.

அவற்றைப் பாதுகாக்கும் பணியில் நியூ சௌத் வேல்ஸின் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவை அமைப்புகள் இறங்கியுள்ளன. அதன் முதல்கட்டமாக, ஆபரேஷன் வல்லபி (Wallaby) என்ற திட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். வல்லபி என்ற விலங்கு உருவம் மற்றும் தகவமைப்பில் அப்படியே கங்காருவைப் போன்றது. ஆனால், அளவில் சிறியது. இவை, காடுகளில் உள்ள பாறைகளில் வாழக்கூடியவை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும். இவைகளுக்கு உணவு வழங்குவதற்காக, வனவிலங்கு சேவை அமைப்பு கடந்த ஒரு வாரமாக முயற்சி செய்து வந்தது.

இந்நிலையில் அந்த அமைப்பு, ஆயிரம் கிலோ அளவிலான கேரட் மற்றும்  கிழங்குவகைகள் போன்றவற்றை ஹெலிகாப்டரில் பறந்தபடி காடுகளில் வீசிவருகின்றனர். இதனால் உணவின்றி தவிக்கும் வல்லபிகளுக்கு புதிய உணவுகள் கிடைத்துள்ளன.ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இதுவரை 2,200 கிலோ காய்கறிகள் கொட்டப்பட்டுள்ளன” என்று ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. இந்தப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி, நெட்டிசன்களின் மனதைக் கவர்ந்துள்ளது. அனைவரும் ஆஸ்திரேலியாவின் இந்த முயற்சியைப் பெரிய அளவில் பாராட்டிவருகின்றனர். பேரழிவு எனக் கூறப்பட்ட இந்த காட்டுத்தீ அணைந்த ஒரு சில நாள்களிலேயே அந்த இடத்தில் மீண்டும் துளிர் விடும் புதிய உயிர்களைப் பார்ப்பது  ஆஸ்திரேலியாவில் பசுமைபூக்க தொடங்கிவிட்டது என்ற பெரும் நம்பிக்கையினை அளிக்கின்றது.

Comment

Successfully posted