செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு!

Nov 26, 2020 11:03 AM 1327

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு ஆயிரத்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரியான செம்பரம்பாக்கம் 24 அடி நீரமட்டம் கொண்டது. கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து 22 அடியை எட்டியதால், 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால், பிற்பகல் 3 மணிக்கு மேலும் 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. மாலை 4.37 மணியளவில் நீர் திறப்பு மூவாயிரம் கன அடியாகவும், மாலை 5.47 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இரவு 8.52 மணிக்கு ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7ஆயிரம் கன அடியாகவும், இரவு 10 மணி அளவில் 9 ஆயிரம் கன அடியாகவும் உயர்த்தப்பட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, நள்ளிரவு ஒரு மணி அளவில் நீர் வெளியேற்றம் 7,000 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை 6 மணியளவில் 5,000 கன அடியாகவும், 8 மணியளவில் 1,500 கன அடியாக குறைக்கப்பட்டது.

Comment

Successfully posted