”ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு” - உச்சநீதிமன்றம் உத்தரவு

Jan 07, 2022 06:38 PM 1867

இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கி முதுநிலை மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு, மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் கூடுதலாக 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, ‘தேசிய தேர்வுகள் முகமை' கடந்தாண்டு ஜூலை 30ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

இதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் தொடர்ந்த பொதுநல மனுவும், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவும்,

உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், போபண்ணா அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுக்கு 8 லட்சம் ரூபாய் வருமான வரம்பு நிர்ணயித்தது சரியானது என்று மத்திய அரசின் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யபட்டது.

ஆனால், அந்த இடஒதுக்கீடு அபத்தமானது என்றும் வருமான வரம்பில் நியாயமான ஒரு காரணத்தை கூட மத்திய அரசு தெளிவுபடுத்தவில்லை என்றும் மனுதாரர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தீர்ப்பை வழங்கியுள்ளது. மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், நடப்பு கல்வியாண்டில் மட்டும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்பிரிவினருக்கு 10 சதவீதம் வழங்க ஆணை பிறப்பித்துள்ளனர்.

மேலும், முதுநிலை மருத்துவ கலந்தாய்வு நடத்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Comment

Successfully posted