இயற்கை உணவுகளின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உணவு திருவிழா

Jan 23, 2020 12:41 PM 191

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாரம்பரிய உணவு திருவிழா சென்னை என்.கே.டி தேசிய மகளிர் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உணவு திருவிழா... குறித்த செய்தி தொகுப்பு ..

மாறி வரும் காலத்திற்கு ஏற்ப உடலை பாதுகாத்துக் கொள்ள, பாரம்பரிய இயற்கை உணவுகளை தேடிச் செல்ல வேண்டிய நிர்பந்தம் இன்றைய தலைமுறைக்கு ஏற்பட்டுள்ளது. இயற்கை உணவுகளின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் திருவல்லிக்கேணி என்.கே.டி. தேசிய மகளிர் கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பாரம்பரிய உணவு திருவிழாவில் தினை, சாமை, வரகு, கொள்ளு, கேழ்வரகு போன்ற பாரம்பரிய உணவுகளை சமைத்து காட்சிக்கு வைத்த மாணவிகள், அதன் மகத்துவம் குறித்தும் பார்வையாளர்களுக்கு மாணவிகள் எடுத்துரைத்தனர்.
 
 
இன்றைய தலைமுறையினர் அவசர உலகில் வாழ்ந்து வருவதால், துரித உணவுகளையே அதிகம் சாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். அதன் செயற்கையான சுவையினால் கவரப்படும் அவர்கள், வீட்டு உணவை தவிர்த்து துரித உணவையே தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இளைய தலைமுறையினருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதுடன், உடல் பருமன், நீரிழிவு நோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதனை தவிர்த்து ஆரோக்கியமாக வாழ, பாரம்பரியமான இயற்கை உணவையே முழு நேரமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை
வலியுறுத்தி இந்த உணவு திருவிழா நடத்தப்படுவதாக கூறுகின்றனர், உணவு திருவிழாவில் பங்கேற்ற மாணவிகள்.

இந்த உணவு திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, இன்றைய சூழலில் பாதுகாப்பான உணவுகள் எதுவும் இல்லை என்றும், 30 நாட்களில் வளர்ந்த கோழிகளின் இறைச்சியை சாப்பிடுவதால் தாய்பாலில் கூட உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் dioxine எனும் வேதி பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
 
 மறைந்து போனதும், நம்மால் மறக்கப்பட்டதுமான இயற்கை உணவுகள் மற்றும் தானிய வகைகளை கண்டுபிடித்து, அவற்றிற்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதுடன், அவசரகால உணவை தவிர்த்தால், ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.
 

Comment

Successfully posted