மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை!

Dec 05, 2020 07:58 PM 523

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாடுபடுவோம் என அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உட்பட முக்கிய அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர். ஜெயலலிதாவின் தியாக வாழ்க்கையையும், உழைப்பையும் மனதில் கொண்டு, கட்சியை கட்டி காப்போம் எனவும், அவரது நற்பணிகளை நினைவில் கொண்டு கடமை உணர்வோடு பணியாற்றுவோம் எனவும் உறுதி மொழி ஏற்றனர்.

அதிமுகவின் மக்கள் நலப்பணிகள் தொடர்ந்து நடைபெற உழைப்பதோடு, ஜெயலலிதா வகுத்து தந்த அரசியல் பாதையில் வீறு நடைபோடுவோம் என அதிமுகவினர் உறுதி ஏற்றனர்.

ஜனநாயகம் வேரூன்றவும், குடும்ப ஆட்சி ஏற்படா வண்ணம் மக்களாட்சியின் மாண்புகளை காப்போம் என சூளூரைத்த அதிமுக நிர்வாகிகள், இயற்கை பேரிடர் நேரங்களிலும் சிறப்பாக இயங்கிய அரசின் சிறப்பான பணிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என உறுதி ஏற்றனர்.

மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் எண்ணப்படி, அயராது உழைத்து, வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைய உறுதி ஏற்போம் என ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் சூளுரைத்தனர்

Comment

Successfully posted