அஜித்தும் அவரது அமர்க்களமான ஆக்சன் காட்சிகளுடனுமான 'வலிமை'

Feb 25, 2022 04:04 PM 71477

வலிமை - அஜித்தின் ஆக்சன் திருவிழா

அஜித் - ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ‘வலிமை,’ நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின்னர் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அஜித்துடன் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா, ஜி.எம். சுந்தர், சுமித்ரா ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அஜித்தின் அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் சூப்பர் போலீஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ளது ‘வலிமை.’

கொலம்பியா நாட்டில் இருந்து புதுச்சேரிக்கு கடல் வழியாக கடத்தி வரப்படும் போதைப் பொருட்கள், மிகப் பெரிய பைக்கர்ஸ் குழுவால் சென்னைக்கு கடத்தப்படுகின்றன. அதேநேரத்தில் சென்னை முழுவதும் செயின் பறிப்புகள், கொலை போன்ற பல்வேறு குற்றங்களும் அடுத்தடுத்து அரங்கேறுகின்றன.

இதையெல்லாம் தீர்த்துக்கட்ட சூப்பர் போலீஸ் தேவையென போலீஸ் கமிஷனர் செல்வா மனதிற்குள் பேசிக்கொள்ள, அதற்காகவே மதுரையில் அவதாரம் எடுக்கிறார் போலீஸ் அதிகாரியான அஜித்.

குற்றங்களை தடுப்பதில் அதிரடியாக நடவடிக்கை எடுக்கும் அஜித், குற்றவாளிகளின் குடும்பங்களுக்கும் பண உதவி செய்து அவர்கள் மனதிலும் இடம்பிடிக்கிறார். இன்னொருபக்கம் அம்மா, குடிகார அண்ணன், வேலையில்லா தம்பி, தங்கை என இவர்களையும் பொறுப்பாக பார்த்துக்கொள்கிறார்.

மதுரையில் இருந்து சென்னை செல்லும் அஜித், தொடர் குற்றங்களில் ஈடுபடும் பைக்கர்ஸ் குழுவை மிகக் கச்சிதமாக நெருங்குகிறார். இடைவேளைக்கு முன்னரே வில்லனை அதிரடியாக கைது செய்து கெத்து காட்டுகிறார் அஜித்.

அப்போது இறுதிக்கட்டத்தை தொடும் திரைக்கதை, அதன்பின்னர் தேவையில்லாமல் குடும்ப செண்டிமெண்டுகளுடன் சிக்கித் தடுமாறுகிறது.

இறுதியாக பைக்கர்ஸ் குழு என்ன ஆனது, அம்மாவிற்கு செய்த சத்தியத்தை அஜித் நிறைவேற்றினாரா என்பதே மீதிக் கதை...

தீமைகளுக்காக வில்லன் பயன்படுத்தும் வலிமையை, ஹீரோ அஜித் எப்படி நல்லதுக்காக கையில் எடுக்கிறார் என, அதிரடி பைக் சண்டைக் காட்சிகளுடன் காட்ட முயற்சித்துள்ளார் ஹெச். வினோத்.

அதை மட்டுமே முழு திரைக்கதையாக நகர்த்தியிருந்தால், ‘வலிமை’ இன்னும் விஸ்வரூபம் எடுத்திருக்கும். ஆனால், அப்படியில்லாமல் ரொம்பவே பழைய குடும்ப செண்டிமெண்டுகளை கதையில் திணித்து, ரசிகர்களின் பொறுமையை சோதித்துவிட்டார்.

‘வலிமை’ படத்தின் மிகப் பெரிய வலிமை எதுவென்றால், அது அஜித்தும் அவரது அமர்க்களமான ஆக்சன் காட்சிகளும் தான்.

அடுத்தடுத்து வரும் பைக் சண்டைக் காட்சிகள், ரசிகர்களை மிரட்டியுள்ளது. இந்தக் காட்சிகர்களில் அஜித், வில்லன் கார்த்திகேயா உள்ளிட்ட மொத்த பைக்கர்ஸ் குழுவும் ஹாலிவுட் தரத்தில் அசத்தியுள்ளனர்.

ஆக்சன் காட்சிகளுக்காக மிகப் பெரிய பலமாக இருந்ததோடு, கடுமையான உழைப்பையும் கொடுத்துள்ளனர் சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்புராயன், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. இதற்காகவே இவர்கள் இருவருக்கும் பெரிய சபாஷ் போடலாம்.

ஹியூமா குரேஷி தேவையான இடங்களில் நடிப்பிலும், சில இடங்களில் ஆக்சன் காட்சிகளிலும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். ஹியூமா குரேஷிக்கும் அஜித்துக்கும் இடையே காதல், டூயட் என எதுவும் இல்லாமல் போனது கொஞ்சம் ஆறுதலானது.

வில்லன் பாத்திரத்தில் கார்த்திகேயாவும் தனது சிக்ஸ் பேக் உடலுடன் மிரட்டியுள்ளார். சில காட்சிகளில் மட்டும் அவரது நடிப்பில் செயற்கைத்தனங்கள் இருந்தன, ஆனாலும் பைக் சண்டைக் காட்சிகளில் அஜித்துக்கு ஈடுகொடுத்து நன்றாக ஸ்கோர் செய்துள்ளார்.

பாடல்களில் யுவன் சங்கர் ராஜாவும், பின்னணி இசையில் ஜிப்ரானும் ரசிகர்களுக்கு அன்லிமிடெட் ட்ரீட் கொடுத்து அசத்தியுள்ளனர். முக்கியமாக பைக் சண்டைக் காட்சிகளில் ஜிப்ரானின் BGM மாஸ்.

ஹெச். வினோத்தின் ‘சதுரங்க வேட்டை,’ ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களில் இருந்த நேர்த்தியான திரைக்கதை ‘வலிமை’ படத்தில் மிஸ்ஸிங்.

அதேபோல் படம் நெடுக அதிகமான பஞ்ச் வசனங்கள் இல்லையென்றாலும், ‘எனக்கு எதிரியா இருக்கலாம் ட்ரை பண்ணாத,’ போன்ற அஜித் பேசும் ஒருசில வசனங்கள் நச்சென்று வந்துள்ளன.

படம் முழுக்க அஜித்தின் ஹீரோயிசத்துக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டதில் மட்டுமே ஹெச். வினோத் பாஸ் செய்துள்ளார்.

- அப்துல் ரஹ்மான்

Comment

Successfully posted