17 ஆண்டுகளில் இல்லாத அளவு சென்னை ஏரிகளின் நீர்மட்டம் அதிகரிப்பு!!- தமிழக அரசின் முயற்சிக்கு பாராட்டு!

Aug 09, 2020 08:09 PM 1563

சென்னையில், மக்களின் குடிநீர் பிரச்சனையை போக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, குடிமராமத்து திட்டத்தின் மூலம், தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை பராமரித்தல், ஆறுகள் மூலம் வீணாக கடலில் கலக்கும் மழை நீரை சேகரித்தல், சிறுசிறு குளங்களை சீரமைப்பது போன்ற பல பணிகளை கடந்த ஒரு வருடமாக, தமிழக அரசு தீவிரமாக எடுத்து வந்தது. இதன் விளைவாக, தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சென்னை ஏரிகளில் 5.8 டிஎம்சி நீர் இருப்பு கூடுதலாக உள்ளதாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பெய்த மழைப்பொழிவாலும், அவற்றை சேமிக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாகவும், கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவு நீர்நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக கூறுகிறார் நீர்நிலை ஆர்வலர் ஜனகராஜ். மேலும், கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் நீர் வரத்து, மற்றும் கிருஷ்ணா நதியிலிருந்து வரும் நீர் வரத்து போன்றவற்றால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்வரத்தும் கணிசமாகஉயர்ந்துள்ளது. குறிப்பாக பூண்டி ஏரியில் 85 கனஅடியும், புழல் ஏரியில் 2 ஆயிரத்து 505 கனஅடியும், சோழவரத்தில் 79 கனஅடியும், செம்பரம்பாக்கத்தில் ஆயிரத்து 843 கனஅடியும், வீராணம் ஏரியில் ஆயிரத்து 465 கனஅடியும் நீர் இருப்பு உள்ளது.

கடந்த ஓராண்டில் நடைபெற்ற நீர்நிலைகள் சீரமைப்பு பணிகளால் தற்போது நல்ல பலன் கிடைத்துள்ள நிலையில், தொடர்ந்து இது போன்று நீர்நிலைகளை பாதுகாப்பதன் மூலம், தண்ணீர் தட்டுப்பாடு மட்டுமின்றி வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரில் இருந்தும் தப்பிக்க முடியும் என்கின்றனர் நீர்நிலை ஆர்வலர்கள்.

 

Comment

Successfully posted