இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது ?

Nov 29, 2020 10:00 AM 1994

கொரோனா தடுப்பூசி மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக மூன்று நகரங்களுக்கு சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி, தடுப்பூசிகளின் தற்போதையை நிலை குறித்து மருத்துவ நிபுணர்களிடம் கேட்டறிந்தார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனைகள் முடிந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதை பெற்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது தொடர்பாக தடுப்பூசி உற்பத்தி மையங்களுக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார். முதலில், குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி, சைடஸ் பயோடெக் பார்க் சென்று பார்வையிட்டார். Zydus Cadila நிறுவனத்தின் ZyCov-D தடுப்பூசி இரண்டாம் கட்ட பரிசோதனையில் உள்ளதால், அங்கு மருத்துவ கவச உடை அணிந்து, ஆய்வகம் மற்றும் மருந்து தயாரிக்கும் கூடங்களை பார்வையிட்ட பிரதமர் மோடி, தடுப்பூசி ஆய்வுப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்களிடம் கேட்டறிந்தார்.

சைடஸ் பயோடெக் பார்க் பார்வையிட்டது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். அகமதாபாத் ஆய்வை முடித்துக் கொண்டு ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவன ஆய்வுக் கூடத்திற்கு பிரதமர் சென்றார். அங்கு தடுப்பூசி தயாரிப்பு பணிகள் கூடத்தை பார்வையிட்ட பிரதமர், மருத்துவ அறிவியலாளர்கள், பாரத் பயோடெக் நிறுவன நிர்வாகிகளுடன் கலந்துரையாடியதுடன், கோவேக்சின் தடுப்பூசி தயாரிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஹைதராபாத் தலைமையகமாக கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ கவுன்சிலுடன் இணைந்து கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்து மூன்றாம் கட்ட பரிசோதனையை நடத்தி வருகிறது.

தொடர்ந்து, புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி தயாரிப்பு பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து ஆய்வகங்களுக்கு சென்று கொரோனா தடுப்பு மருந்துகளின் தற்போதையை நிலை குறித்து மருத்துவ நிபுணர்களிடம் பிரதமர் கேட்டறிந்தார். மூன்று கட்ட பரிசோதனைகளையும் முடித்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை சீரம் நிறுவனம், இந்தியாவில் விநியோகிக்க ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted