செப்.28-ல் அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் - தலைமைக்கழகம் அறிவிப்பு

Sep 18, 2020 09:06 PM 2258

செப்டம்பர் 28-ம் தேதி அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

2021-ம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருப்பதையொட்டி தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்குத் தொடங்கி சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைச்சர்கள் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்தல் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் தீவிர ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பிறகு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், “வரும் 28-ம் தேதி காலை 9.45 மணிக்கு, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெறும். அதற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை வகிப்பார். இக்கூட்டத்திற்காக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழோடு, தவறாமல் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted