``கொரோனாவைக் கட்டுப்படுத்த இது தான் வழி”

Oct 19, 2020 10:25 AM 746

வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றினால், பிப்ரவரிக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என்றும், புதிதாக ஊரடங்கை அமல்படுத்த தேவை இல்லை என்றும் மத்திய அரசின் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆராய, மத்திய அரசு கடந்த ஜூன் ஒன்றாம் தேதி, நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு, பலகட்ட ஆய்வுகள் நடத்தி, அறிக்கை வெளியிட்டது. அதில், இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தாமல் இருந்திருந்தால் ஜூன் மாதம், கொரோனா பாதிப்பு ஒரு கோடியே 40 லட்சத்தை தாண்டியிருக்கும் எனவும், பலி எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கொரோனா இறப்பு விகிதம் 2 சதவீதத்திற்குள் இருப்பதாக நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது அமலில் உள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக பின்பற்றினால், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில், இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி விடலாம் என நிபுணர் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்கனவே உச்ச நிலையை கடந்து விட்டதால், இனி புதிதாக ஊரடங்கு தேவையில்லை எனவும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted