பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதரின் 13-வது ஆண்டு நினைவு தினம் இன்று.

Oct 20, 2021 12:31 PM 5280

தமிழ் சினிமாவின் இலக்கணத்தையும் இயக்குநர்களின் முக்கியத்துவத்தையும் மாற்றி அமைத்த பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதரின் நினைவு தினம் இன்று. நெஞ்சிருக்கும் வரை நெஞ்சம் மறக்க முடியாத அவரது படைப்புகளை பற்றி பின்னோக்கி சுழல்கிறது இந்த திரைத் தொகுப்பு.....

image
1933ம் ஆண்டு மதுராந்தகம் அருகே பிறந்த ஸ்ரீதர், தமிழ் சினிமாவை வற்றா மகாநதியாக கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வளம் சேர்த்தார். தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர்கள் என சுழன்றுக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை முதன் முதலில் இயக்குநர் ஒருவர் சுழன்றடித்தார் என்றால், அது ஸ்ரீதராகவே இருக்க முடியும்.


சினிமாவில் அடியெடுத்து வைக்க முயன்ற ஸ்ரீதருக்கு, முதலில் தோல்வியே கிடைத்தது. ஆனாலும் கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் தனது பயணத்தை தொடங்கிய அவர், அழகுத் தமிழ் வசனங்களால் ரசிகர்களின் மனதில் ராஜ சிம்மாசனமிட்டு அமர்ந்தார்.


1957ல் இயக்குநர் அவதாரம் எடுத்த ஸ்ரீதர், ரசிகர்களுக்கு தனது கன்னி பரிசாக, கல்யாண பரிசு படத்தை இயக்கி, காலமெல்லாம் மறக்கமுடியாத புது அனுபவத்தை கொடுத்தார்.


மீண்ட சொர்க்கம், விடிவெள்ளி, தேன் நிலவு, சுமைதாங்கி என அடுத்தடுத்து இயக்கிய படங்களில், காதல் உணர்வின் மிச்ச சொச்சங்கள் வரை தொட்டார். சோகத்தையெல்லாம் பிழிந்து வார்த்தார், இதன் உச்சமாக ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தை கூறலாம்.

image
காதல், சோகம் என்றில்லாமல் நகைச்சுவை படங்களிலும் தனது புதுமையான பாய்ச்சலை செலுத்தினார் ஸ்ரீதர். காதலிக்க நேரமில்லை, ஊட்டிவரை உறவு என அவரின் படங்கள் அனைத்தும், ஒவ்வொரு தளத்திலும் தன்னிகரற்ற படைப்புகளாக கொண்டாடப்பட்டன.

தமிழ் சினிமாவில் ஒரு பேரலையைப் போல எழுந்தார் ஸ்ரீதர். அவரது வருகைக்குப் பின்னர் தமிழ்த் திரையுலகம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது. திரையின் எல்லா நுட்பங்களும் ரசிகர்களின் மனதை திருடியது. அதுவே ஸ்ரீதர் என்ற ஆளுமையின் திரை மொழியாகி போனது.

image

30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி, காட்சிகள் அமைப்பிலும், கேமரா கோணங்களிலும் புதுமையை புகுத்தி, இயக்குநர்களின் தனித்துவத்தை அடையாளப்படுத்திய இயக்குநர் ஸ்ரீதருக்கு நினைவஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கிறது நியூஸ் ஜெ...

 

 

Comment

Successfully posted