கோழிக்கோடு விமான விபத்தில் 2 விமானிகள் உள்பட 17 பேர் உயிரிழப்பு!

Aug 08, 2020 08:36 AM 631

துபாயில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கேரளா வந்ததுள்ளது. விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 2 பைலட்டுகள் மற்றும் 5 விமானக் குழுவினர் என மொத்தம் 190 பேர் பயணித்தனர். கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் நேற்று மாலை 7.41மணிக்கு தரையிறங்கிய போது, ஓடுபாதையில் இருந்து சறுக்கிச் சென்று, கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. தரையில் மோதிய வேகத்தில் விமானம் இரண்டு துண்டாக உடைந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் சுமார் 24 ஆம்புலன்ஸ் உதவியுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் மீட்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணிகளில் 19 பேர் இறந்த நிலையிலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தநிலையிலும் மீட்கப்பட்டனர்.

படுகாயமடைந்தவர்கள், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் கவலைக்கிடமாக இருப்பதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த விமனத்தில் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த மூன்று பேரில் ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தில் பயணித்தவர்களின் விவரங்கள் குறித்து அறிய கோழிக்கோடு நிர்வாகம் சார்பில் 0495-2376901 என்கிற உதவி எண்ணை அறிவித்துள்ளது. இதையடுத்து விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு விமான போக்குவரத்துதுறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். அப்போது மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக கூறினார்.

Comment

Successfully posted