ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் முன்பே, திமுக விற்கும் ரஜினிக்குமான மோதல் தொடங்கி விட்டது

Oct 26, 2018 07:21 PM 375

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் முன்பே, திமுக விற்கும் ரஜினிக்குமான மோதல் தொடங்கி விட்டது. ரஜினிகாந்த் பதவி ஆசை பிடித்தவர் என கட்டுரை வெளியிட்டு, ரஜினியுடன் மல்லுக்கட்டத் தொடங்கியுள்ளது திமுக. அக்டோபர் 23 ந்தேதி ரஜினிகாந்த் வெளியிட்டு இருந்த ஒரு அறிக்கையில், வெறும் ரசிகர் மன்றத்தை வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்கமுடியும் என்று யாராவது நினைத்தால், அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம் என்று குறிப்பிட்டிருந்தார்.

ரஜினியின் இந்தக் கருத்துக்கு அப்பாவி ரசிகன் என்ன சொல்கிறான் என்பது போல் முரசொலியில் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், 30, 40 வருடங்கள் ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டும், மக்கள் மன்ற பதவிக்கு தகுதியாகாது என்ற ரஜினியின் கருத்துக்கு, அதே 30, 40 வருடங்கள் திரையில் நடித்தது மட்டும், முதல்வர் ஆவதற்கு தகுதியா என்று ரசிகன் கேட்பது போல் எழுதப்பட்டுள்ளது. மேலும், நான் அரசியலுக்கு வந்தால் அதை வைத்து பதவி வாங்கணும், பணம் சம்பாதிக்கணும்’ என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்கமாட்டேன், அப்படிப்பட்டவர்கள் இப்போதே விலகிவிடுங்கள் என்று நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன் என்று சொன்ன ரஜினியிடம், அரசியலுக்கு வருவது பதவி வாங்க அல்ல என்றால், வரும் சட்டசபை தேர்தலில் எல்லா இடங்களிலும் போட்டியிடுவோம் என அறிவித்தது ஏன் ? பதவிக்காக அரசியல் இல்லை என்றால், பெரியாரைப் போல இயக்கம் ஆரம்பித்து கொள்கையிலே உறுதியாக நின்று போராடவேண்டியதுதானே ? உங்களுக்கு மட்டும் முதலமைச்சர் பதவி வேண்டும், நாங்கள் எல்லாம் அதற்கு நாயாய் பேயாய் உழைக்கவேண்டும், ஆனால் நாங்கள் மட்டும் பதவி ஆசைபடக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம் என்று ரசிகன் கேட்பதாய், கட்டுரை கூறுகிறது. நீ திரையில் தோன்றியபோது கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து விசில் அடித்து, ஆரவாரக் கூச்சல் போட்டு, வாழ்க கோஷம் முழக்கிய எங்களைத் தகுதியற்ற கூட்டமாக்கிவிட்டாயே தலைவா, இதை உன் மனசாட்சி எப்படி ஏற்கிறது என்று ரஜினி ரசிகர்கள் கேட்பது போல், கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது. எது எப்படியோ, கட்சி தொடங்கும் முன்பே, காட்சி தொடங்கிவிட்டது ரஜினிக்கு. இப்படியே சென்றால், ரஜினியின் கட்சி உதயமாகுமா இல்லை உதய சூரியனால் அஸ்தமிக்குமா என்றே தெரியவில்லை !!

Comment

Successfully posted