புயலைக் கிளப்பியுள்ள 3 சட்ட மசோதாக்கள் - ஆதரிக்கவும், எதிர்க்கவும் என்னென்ன காரணங்கள்?

Sep 18, 2020 04:55 PM 1405

விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச்சட்ட மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் மக்களவையில் புயலைக் கிளப்பி உள்ளன. எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கவும், ஆளுங்கட்சி வரிந்துகட்டிக்கொண்டு ஆதரிக்கவும் அப்படி என்ன இருக்கிறது, இந்த மசோதாக்களில்?

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, விவசாயிகள் மற்றும் வணிகர்கள் வேளாண் விளைபொருள்களை, விரும்பிய இடங்களில் விற்பனைசெய்ய வகைசெய்கிறது. மாநிலங்களுக்குள்ளேயும் வெளியேயும் தங்களுடைய பொருள்களை விவசாயிகள் தடையில்லாமல் கொண்டுசென்று விற்பனைசெய்ய முடிவதால் போக்குவரத்துக்கான செலவும் குறைக்கப்படும் என்று இந்த மசோதா கூறுகிறது. அதேசமயம், இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் விற்பனைக்கூடங்கள் மூலம் மாநில அரசுக்கு வரும் வருவாயில் இழப்பு ஏற்படும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

விவசாய விளைபொருள் வர்த்தக மசோதாவின் மூலம் விற்பனை நிறுவனங்கள், மொத்த விற்பனையாளர்கள் ஆகியோருடன் விவசாயிகள் நேரடியாக ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக்கொண்டு, உரிய விலையைப் பெறமுடியும். அதே நேரத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களும், வியாபாரிகளும் கைகோர்த்துக்கொண்டு செயல்பட்டால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கொடுக்கமுடியாத நிலை ஏற்படும் என்றும், இதனால், விவசாயிகள் மிகுந்த இழப்புக்கு ஆளாவார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச்சட்ட மசோதாவில், அரிசி, கோதுமை, வெங்காயம், உருளைக் கிழங்கு, பருப்பு, பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் ஆகிய விளைபொருள்கள் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்தத் திருத்தமானது மேற்கூறிய உணவுப் பொருள்களின் உற்பத்தி, சேமிப்பு, வினையாக்கம் மற்றும் விநியோகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

உணவுப் பொருள்களைப் பதுக்கிவைத்து, விலையை ஏற்றி கார்ப்பரேட்டுகளும் பெரும் வியாபாரிகளும் இச்சட்டத்தால் கொள்ளை லாபம் பெறமுடியும் என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

இந்த மசோதாக்களால் விலை உயர்வதுடன், விவசாயிகள், நுகர்வோர் என அனைத்து தரப்ப்பினரும் பாதிப்படைவார்கள் என்பதே எதிர்க்கட்சிகளின் வாதம்.

Comment

Successfully posted