"2.5 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டதால் காங்கிரசுக்கு காய்ச்சல்"

Sep 18, 2021 07:59 PM 1089

இந்தியாவில் ஒரே நாளில் இரண்டரை கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டதால், காங்கிரசுக்கு காய்ச்சல் வந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி கேலி செய்துள்ளார்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளில், நாடு முழுவதும் இரண்டரை கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி மத்திய அரசு புதிய சாதனை படைத்தது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் மோடியின் பிறந்தநாளை தினமும் கொண்டாடுங்கள் என விமர்சித்தார்.

உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் கர்நாடகத்தில் மோடி பிறந்தநாளன்று தினசரி சராசரியை விட அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்றும், அதனால், தனது பிறந்தநாளை பிரதமர் நரேந்திர மோடி தினமும் கொண்டாட வேண்டும் என தான் விரும்புவதாகவும் ப.சிதம்பரம் கூறினார்.

இந்நிலையில், கோவா மாநில சுகாதாரத்துறை ஊழியர்களுடன் காணொலியில் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ஒரே நாளில் இரண்டரை கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டதால், காங்கிரசுக்கு காய்ச்சல் வந்துவிட்டது என்று கேலி செய்துள்ளார். சுற்றுலா தலம் உள்ள மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி முகாமிற்கு முன்னுரிமை கொடுத்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

Comment

Successfully posted