கோவையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்படும் அரசுப் பள்ளிகள்

Jun 25, 2019 08:58 AM 198

நகர்புறங்களில் செயல்படும் தனியார் பள்ளிகளில் கிடைக்கும் தரமான கல்வியை கிராமப்புற பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கும் சாத்தியமாக்கி உள்ள அரசுப்பள்ளிகள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வள்ளுவர் அரசு தொடக்கப்பள்ளியில், ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டு மாணவர்களின் கற்றல் திறமையை அதிகரிப்பதுடன் அவர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு அதற்கென தனி சீறுடைகளும் வழங்கப்படுவதால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு ஊட்டசத்தான உணவுகளுடன் பாதாம் பால், பிஸ்கட், சுண்டல் போன்றவைகளும் வாரத்தில் ஒரு நாள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதேபோல் மேட்டுப்பாளையத்தில் மேலும் சில அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசு மட்டுமல்லாமல், ஆசிரியர்கள், உள்ளூர் இளைஞர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக வலைதள நண்பர்கள் மூலமாகவும் அதிக அளவிலான பள்ளிகளில் இந்த ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கபட்டுள்ளன. மேலும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து மாணவர்களை அரசுப் பள்ளிகள் கவர்ந்து வருகின்றன.

வண்ணம் பூசப்பட்ட பள்ளி கட்டிடங்கள் மற்றும் பசுமையான சூழல் என ஒரு தரமான கல்வியை பயிலும் இந்த அரசுப் பள்ளி மாணவர்கள் டி.வி நிகழ்ச்சிகள், தனியார் பள்ளிகள் நடத்தும் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்று வருகின்றனர். இதன் காரணமாக தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது மன நிறைவை தருவதாக கூறுகின்றனர் பெற்றோர்கள்.

மாற்றங்கள் வேகமாக நிகழும் நவீன டிஜிட்டல் யுகத்தில் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் அரசுப் பள்ளிகளும் தரம் உயர்ந்து வருவது பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது என்றால் மிகையல்ல.

Comment

Successfully posted