அருண்ஜெட்லியிடம் அனைத்தையும் பேசிவிட்டேன் - விஜய் மல்லையாவின் புதிய சர்ச்சை

Sep 12, 2018 11:01 PM 441

நாட்டை விட்டு வெளியேறும் முன்னர் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை பலமுறை சந்தித்து பேசியதாக விஜய் மல்லையா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஜய் மல்லையா இதனைத் தெரிவித்தார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுப்பதாகவும், எனினும் நீதிமன்றம் அனைத்தையும் தீர்மானிக்கும் என மல்லையா குறிப்பிட்டார்.

ஆனால் மல்லையாவின் குற்றச்சாட்டுக்களை நிதியமைச்சர் அருண்ஜெட்டிலி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னை சந்தித்தாக மல்லையா கூறியது உண்மைக்கு புறம்பானது எனத் தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை மல்லையாவை சந்திக்க தான் எந்த அனுமதியும் வழங்கவில்லை எனத் தெரிவித்தார். தனிப்பட்ட முறையில் அவரை சந்திக்கவே இல்லை என்றும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான அவரை நாடாளுமன்றத்தில் மட்டுமே சந்தித்ததுண்டு என்றும் தெரிவித்தார்.

பிரச்னைக்குத் தீர்வு காண தனக்கு உதவுமாறு நாடாளுமன்ற வளாகத்தில் தன்னிடம் ஒருமுறை உதவி கோரியதாக குறிப்பிட்ட ஜெட்லி, தன்னை அணுகுவதைவிட வங்கியை அணுகுவதே சிறந்ததாக இருக்கும் என அறிவுறுத்தியதாகக் குறிப்பிட்டார். மேலும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மல்லையா தவறாக பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் லண்டனில் நடைபெற்று வரும் விசாரணையில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மல்லையாவை நாடு கடத்தும் விவகாரத்தில் டிசம்பர் 10ம் தேதி லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கூறியுள்ளார். வழக்கில் இந்திய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டால் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் எனத் தெரிகிறது.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘நாட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு விஜய் மல்லையா அருண் ஜெட்லியை சந்தித்ததாக வெளியான செய்தி தொடர்பாக பிரதமர் மோடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணை தொடர்பாக அருண் ஜெட்லி நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related items

Comment

Successfully posted