மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Oct 02, 2018 11:20 AM 447

பிரபல இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள திரைப்படம் செக்கச் சிவந்த வானம்.

சமீபத்தில் வெளியான இத்திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னை அபிராமபுரத்தில் உள்ள மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்திற்கு இன்று காலை மர்மநபர் ஒருவர் தொலைபேசியில் பேசியுள்ளார்.

செக்கச் சிவந்த வானம் படத்தில் இடம் பெற்றுள்ள வசனம் ஒன்று சர்ச்சைக்குரிய வகையில் உள்ளதாகவும், அதனை நீக்க வேண்டும் என்றும் கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

1995 -ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய பம்பாய் திரைப்படம் வெளியான போது அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்து அப்போது, நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.

23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மணிரத்னத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மணிரத்னம் வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, கொலை மிரட்டல் விடுத்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மணிரத்னத்தின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Comment

Successfully posted