தொடர்ந்து அவதூறு பரப்பினால் வழக்கு - ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை!

Sep 20, 2018 06:41 PM 230

காற்றாலை மின்சாரத்தில் ஊழல் என்று ஸ்டாலின் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாரோ எழுதிக் கொடுக்கும் அறிக்கையை சரிபார்க்காமல் அரசின் மீது ஸ்டாலின் குற்றம் சுமத்துவதாக கூறினார்.

மேலும் மின்சாரத்துறையைப் பற்றி ஸ்டாலின் முழுமையாக தெரிந்து கொண்டு அறிக்கை விட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். நாளை தூத்துக்குடி செல்லவுள்ள நிலையில், நிலக்கரி கையிருப்பு பற்றி உறுதிபட தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

தூத்துக்குடியில் ஆறு நாட்களுக்கும், சென்னை மற்றும் மேட்டூரில் 3 நாட்களுக்கும் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். காற்றாலை அதிபர்களுக்கு பணம் கொடுத்ததாக ஸ்டாலின் குற்றம்சாட்டுவது தவறு எனவும், ஸ்டாலின் இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் எனவும், அமைச்சர் தெரிவித்தார்.

உண்மைத் தன்மையை ஆராய்ந்து ஸ்டாலின் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றார் அவர். உற்பத்தி செய்யாத மின்சாரத்துக்கு பணம் கொடுத்ததாகக் கூறுவது தவறான பிரச்சாரம் என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து தவறான தகவல்களை ஸ்டாலின் பரப்பி வந்தால் நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார். மின்சாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தவறு நடக்கும்போது அதைக் கண்டறிந்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

காற்றாலை மின் உற்பத்தியில் முறைகேடு நடந்ததை கண்டறிந்து 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். தமிழகம் மின்மிகை மாநிலமாக இருப்பதாகவும், எனவேதான் மின் உற்பத்தியை குறைத்துள்ளதாக அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்தார்.

மின்துறை உதவி பொறியாளர் தேர்வு 100 சதவீதம் உண்மைத்தன்மையுடன் நடைபெறும் எனவும் அதற்கான அறிவிப்பு இரண்டு மாதங்களில் வெளியாகும் எனவும் அவர் கூறினார்.

உடன்குடி திட்டத்தில் மீனவர்களுடனான பிரச்சனைக்கு சுமூக தீர்வு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Comment

Successfully posted