நகைச்சுவை நடிகர் நாகேஷின் பிறந்த தினம் இன்று

Sep 27, 2018 12:21 PM 877

திருவிளையாடலின் தருமி, தில்லானா மோகனாம்பாளின் வைத்தி, காதலிக்க நேரமில்லை-யின் செல்லப்பா என்று காலம் கடந்த கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்த நாயகன் நாகேஷ். 1933-ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிறந்த இவருக்கு கல்லூரியில் படிக்கும்போது அம்மைநோய் தாக்கியது. அதனால் அவரது முகத்தில் நிரந்தரமாக தழும்புகள் ஏற்பட்டது. ரயில்வேதுறையில் எழுத்தராக வாழ்க்கையை துவக்கிய அவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் நாடகங்களில் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் தாராபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு இடம்பெயர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

1958-ல் சிறிய வேடங்களில் தமிழ் திரைப்படங்களில் தலைகாட்ட துவங்கிய நாகேசுக்கு 1962-ல் வெளிவந்த நெஞ்சில் ஓர் ஆலயம் வெற்றியின் வெளிச்சத்தைக் காட்டியது. அன்று துவங்கி அடுத்த 50 ஆண்டுகளுக்கு பரபரப்பான நடிகராகவே வாழ்ந்து மறைந்தார் நாகேஷ். 1964-ல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படம் ஒட்டுமொத்தமாக நகைச்சுவை படமாக திகழ்ந்தாலும் அதில் ரத்தினமாக மிளிர்ந்தவர் நாகேஷ். அதற்கு அடுத்த ஆண்டு 1965-ல் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவாஜியுடன் இணைந்து நாகேஷ் நடித்த திருவிளையாடல் படமும், தருமி என்ற கதாபாத்திரம் அவரது நடிப்பாற்றலுக்கு சான்றாக திகழ்ந்தது.

நகைச்சுவை வேடங்களில் முத்திரை பதித்து வந்த நாகேசுக்கு கதாநாயகன் வாய்ப்பும் வந்தது. இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அதிலும் அசத்தினார். அந்த படத்தில் இடம்பெற்ற அவளுக்கென்ன அழகிய முகம் பாடலில் நடனத்திலும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். எழுத்தாளர் ஜெயகாந்தன் இயக்கிய யாருக்காக அழுதான் திரைப்படத்தில் ஜோசப் என்ற வேடத்தில் நாகேஷ் வெளிப்படுத்திய நடிப்பு உலகத்தரம்.

1960-கள் துவங்கி 1970-களின் பிற்பகுதி வரை எம்ஜிஆர் - சிவாஜி - ஜெமினி கணேசன் என்ற மூவேந்தர்களின் திரைப்படங்களில் ஆஸ்தான நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அப்பேர்பட்ட ஆளுமைகளுடன் நடித்த போதும் தன்னுடைய தனித்துவம் பறிபோகாமல் பார்த்துக் கொண்டார். வெறும் நகைச்சுவை வேடங்கள் மட்டுமல்லாமல் குணசித்திர கதாபாத்திரங்களிலும் அடடா என்று ஆச்சர்யபடுத்தினார் நாகேஷ்.

எம்ஜிஆர் - சிவாஜி காலத்தைத் தொடர்ந்து ரஜினி-கமல் காலகட்டத்திலும் தனக்கான இடத்தை குறிப்பிட்ட அளவு தக்கவைத்துக் கொண்டதே நடிப்பின் மீதான அவரது காதலுக்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம். மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள் படத்திலும் வில்லன் வேடத்திலும், நம்மவர் படத்தில் மகளை பறிகொடுத்த முதிய தந்தை வேடத்திலும் அவரது நடிப்பாற்றல் உச்சத்தை தொட்டது. திரையில் அவர் கடைசியாக நடித்த திரைப்படம் 2008-ம் ஆண்டு வெளியான தசாவதாரம்.

அதன்பிறகு உடல் நலிவுற்ற அவர் 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந் தேதி உயிர் நீத்தார். நடிப்பு, நடனம், வசன உச்சரிப்பு, நடிப்புத் தொழில் மீது அவர் காட்டிய ஈடுபாடு ஆகிய நான்கு முக்கிய அம்சங்கள் தான் நாகேஷ் என்ற மகத்தான கலைஞனிடம் இளம்தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டியது.

Comment

Successfully posted