சின்மயி கூறியிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து வைரமுத்து பதில் அளிக்கும் வரை பொறுமை காட்ட வேண்டும் - நடிகை கஸ்தூரி

Oct 10, 2018 01:52 PM 670

பாடகி சின்மயி கூறியிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து பாடலாசிரியர் வைரமுத்து பதில் அளிக்கும் வரை பொறுமை காட்ட வேண்டும் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் சந்தியா மேனன் என்பவர் பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு பற்றி ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருந்தார். இதற்கு ஆதரவு தெரிவித்ததோடு வைரமுத்து மீது புதிய குற்றச்சாட்டுக்களையும் பாடகி சின்மயி தெரிவித்து இருந்தார். இதற்கு நடிகைகள் சமந்தா, வரலட்சுமி ஆகியோரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தமது முகநூல் பக்கத்தில் இதுகுறித்து கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். வைரமுத்து மீது சொல்லப்படும் பாலியல் குற்றச்சாட்டுக்களால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சின்மயி துணிவுள்ள பெண் என்றும், உண்மைத் தன்மையை ஆராய்ந்த பிறகே அவர் பேசத் துவங்கியிருப்பார் என்று நினைப்பதாக கஸ்தூரி தெரிவித்துள்ளார். அதேசமயம், வைரமுத்து பதில் சொல்லும்வரை அவசரப்பட்டு தீர்ப்பு சொல்லும் தகுதி இல்லையென்றும் அவர் கூறியுள்ளார். திரையுலகில் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் சீண்டல்கள் குறித்து ஹாலிவுட் நடிகைகள் METOO என்ற பெயரில் ட்விட்டர் பக்கத்தில் எழுதி வருகின்றனர். அந்தவகையில் இந்தியாவிலும் பாலிவுட் நடிகைகள் துவங்கி தற்போது தமிழ் திரையுலகிலும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் புயலை உருவாக்கி வருகின்றன.

Comment

Successfully posted