நடிகர் விஜயகுமார் மீது கமிஷனரிடம் புகார் அளிக்க வனிதா முடிவு

Sep 21, 2018 05:05 AM 663

நடிகர் விஜயகுமார் மீது காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயகுமார், தனது மகள் வனிதா மீது சென்னை மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரில் தனக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளதாகவும், திரைப்படங்கள் எடுப்பதற்காக அந்த வீடு வாடகைக்கு விடப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தனது மகள் வனிதா, சினிமா படப்பிடிப்பு நடத்துவதாகக் கூறி அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார் என்றும், ஆனால் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அவர் வீட்டை காலி செய்யவில்லை என்றும் புகார் அளித்துள்ளார். மேலும், வீட்டில் தனக்கும் பங்கு உள்ளதால் வீட்டை காலி செய்ய முடியாது என விஜயகுமாரிடம் வனிதா கூறியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார்.

புகார் தொடர்பாக போலீசார் வீட்டிற்கு வருவதைத் தெரிந்துகொண்ட வனிதா, தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நள்ளிரவில் வடபழனி காவல் நிலையத்தில், வனிதா புகார் அளிக்க வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தன் தந்தை வேண்டும் என்றே தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார் என்று குற்றம்சாட்டினார். மேலும், தன் தாய் வாழ்ந்த வீட்டில் தான் வாழ இடம் இல்லை என்று, தன்னை அடித்து வெளியேற்றி உள்ளார் என்றும் கவலைத் தெரிவித்தார். அத்துடன், இது தொடர்பாக தாம், சென்னை காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும் வனிதா தெரிவித்தார்.

Comment

Successfully posted