தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிதி

Aug 27, 2018 11:41 AM 670

 

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில், புதிதாக கட்டப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சினிமா படப்பிடிப்பு தளத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இதனையடுத்து விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அரசியலில் திரைப்படத் துறையினரின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான் என்று புகழாராம் சூட்டினார். சினிமா துறையின் மூலம் சமுதாய நலன் சார்ந்த கருத்துகளை மக்களிடையே விதைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்று சாதித்துக்காட்டிய எம்.ஜி.ஆர். பெயரால் படப்பிடிப்பு தளம் உருவாக்கி இருப்பது பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார். 110 அடி நீளமும், 100 அடி அகலமும், 56 அடி உயரமும் கொண்ட இந்த படப்பிடிப்புத் தளம் இந்தியாவிலேயே மிக உயர்ந்த படப்பிடிப்பு தளம் என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் அமைக்கப்படும் படப்பிடிப்பு தளத்திற்கு தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் திரைப்படங்கள் மூலம் எடுத்துச்சொன்ன உயர்ந்த கருத்துகளையும், உயர்ந்த லட்சியங்களையும், புதிதாக உருவாக்கப்படுகின்ற திரைப்படங்களில் எடுத்துச்சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போதுதான், நல்ல வீடு உருவாகும் என்றும், அதன் மூலம் நல்ல நாடு, நல்ல சந்ததி, நல்ல இளைய தலைமுறை உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன் மற்றும் தென்னிந்திய திரைப்பட சங்கத்தினர் பலரும் கலந்துகொண்டனர்.

Comment

Successfully posted