அக். 1 முதல் 10-12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் - தலைமைச் செயலாளர் உத்தரவு

Sep 24, 2020 03:21 PM 1154

கொரோனாவால் தமிழ்நாட்டில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து 10, 11, 12 வகுப்புகளின் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்:

கடந்த ஆகஸ்டு 29ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட 4வது பொதுமுடக்கத்தளர்வு ஆணையில் 50% ஆசிரியர்களும் பிற பணியாளர்களும் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு மட்டும் இது பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 21ம் தேதி முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளில், 9 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்கள் தன்னார்வத்தில் பள்ளிக்கு வரலாம் என்று குறிப்பிட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இங்குள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் 10 முதல் 12 வரை படிக்கும் மாணவர்கள் தன்னார்வத்தில் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைவிடப்பட்டது. அதைப் பரிசீலித்த மாநில அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளின் 10-12 மாணவர்கள் தன்னார்வமாக பள்ளிக்கு வருவதற்கு அனுமதி அளிக்கிறது. வரும் 1ம் தேதி முதல் ஏற்கெனவே, மைய அரசு அறிவிட்த்துள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று தலைமைச் செயலாளர் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted