11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பல்வேறு சாதனை பதக்கங்களை படைத்துள்ளார் அதன் தொகுப்பு

Oct 23, 2019 09:29 PM 95

ராமநாதபுரம் அருகே 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் குண்டு எறிதல், ஈட்டி எரிதல் போன்ற போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகிறார், அவரை பற்றிய தொகுப்பு இதோ...

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்து வருபவர் மோகன். இவரது மகள் ஐஸ்வர்யா. இவர் அங்குள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார், விளையாட்டில் சிறு வயது முதலே ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா பெற்றோரின் முறையான வழிகாட்டுதலின் பெயரில் தடகளப் போட்டிகளில் குறிப்பாக வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகியவற்றில் திறம்பட சாதனை புரிந்து வருகிறார்.

அந்த வகையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தென் மாநிலங்களுக்கிடையேயான போட்டியில் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அதேபோல அண்மையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கத்தையும் வென்றார் . இதுவரை 56 தங்கப்பதக்கங்கள் 7 வெள்ளி பதக்கங்களை 5 வெண்கலப் பதக்கங்களை பெற்று ஏராளமான பாராட்டு சான்றுகளையும் பெற்றுள்ளார். மாணவியின் சாதனையை அறிந்த இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாணவியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர்.

இது குறித்து தங்க மங்கையான மாணவி ஐஸ்வர்யா கூறும்போது, பொதுவாகவே விளையாட்டு துறையில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை , பெண்களை விளையாட்டு துறையில் ஊக்குவிக்க பெற்றோர்கள் முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார்

சாதிப்பதற்கு ஆண் பெண் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது திறமை மட்டும் இருந்தால் எந்த துறையிலும் யார் வேண்டுமானாலும் ஜொலிக்கலாம், பெண் தானே என, வெறுமனே வெட்டியாக நக்கல் பேச்சு பேசித்திரியும் நபர்களின் பேச்சுக்களையெல்லாம் பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் காரியத்தில் கண்ணாய் இருந்தால் வெற்றி என்பது நம் சட்டைப் பையில் என்பதற்கு மேலுமொரு நல்ல சான்றாக திகழ்கிறார் தங்க மங்கை ஐஸ்வர்யா.

Comment

Successfully posted