சென்னை கன்னிமாரா நூலகத்திற்கு125 வயது!

Dec 08, 2020 02:26 PM 1285

மனிதர்களுக்கு அறிவுடச் சுடர் ஏற்றும் திரியான புத்தகங்களை திரட்டி, திகட்டாத திரட்சியாய்த் திகழும் சென்னை கன்னிமாரா நூலகம்125 வது ஆண்டில் கால் பதிக்கிறது. கன்னிமாரா கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்.

 

பிரிட்டிஷ் ராணுவத்தில் கேப்டனாக இருந்த ஜெஸ்ஸி மிட்செல், 1860 ஆம் ஆண்டு சுமார் 100 புத்தகங்களோடு அருங்காட்சியகத்தில் சிறிய நூலகத்தை துவங்கினார். அதை 1890ல் மெட்ராஸ் கவர்னராக இருந்த Robert Bourke என்ற The Lord Connemara பொது நூலகமாக மாற்ற அடிக்கல் நாட்டி, 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி கன்னிமாரா நூலகம் திறக்கபட்டது. சென்ட்ரல் ரயில் நிலையம், உயர்நீதிமன்றம், அருங்காட்சியகம் மற்றும் சட்டக்கல்லூரியை இந்தோ சார்சனிக் பாணியில் வடிவமைத்த ஹென்ரி இர்வின் தான் கன்னிமாரா நூலகத்தையும் வடிவமைத்தார்.

1948 ஆம் ஆண்டு பொது நூலக சட்டம் இயற்றப்பட்டு, 1950ல் நடைமுறைக்கு வந்தது. அதன்பிறகு கன்னிமாரா நூலகம் மாநிலத்தின் மைய நூலகமாக அறிவிக்கப்பட்டதுடன், இந்தியாவில் உள்ள நான்கு தேசிய நூலகங்களில் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது. ஐ.நா., யுனெஸ்கோ வளர்ச்சி அமைப்புகளின் அனைத்து வெளியீடுகளும் கிடைக்கும் தகவல் மையமாகவும் மாறியது.

1974 ஆம் ஆண்டு புதிய கட்டடம் கட்டப்பட்ட பிறகு, 81ல் மாணவர்களுக்கான பாடநூல் பிரிவும் துவங்கப்பட்டது. மேலும், 1994 ஆம் ஆண்டு கன்னிமாராவில் துவங்கப்பட்ட குடிமைப் பணி கல்வி மையம், நூலக வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம். கடந்த 25 ஆண்டுகளில் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்று அதிகாரிகளாக இருப்பவர்களின் ரத்தத்திலிருந்து கன்னிமாரா என்ற பெயரை பிரித்தெடுத்துவிட முடியாது.

6 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களோடு அறிவுக்களஞ்சியமாகவும், சென்னையின் அடையாளமாகவும் திகழும் கன்னிமாரா நூலகம் 125 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கூகுளில் தட்டினால் பதில் தெரிந்து விடும் என்ற சிந்தனை மேலோங்கி இருக்கும் காலகட்டத்தில் புத்தங்கள் முக்கியம் என்பதற்கும் அதற்கு நூலகங்கள் முக்கியம் என்பதற்கும் உரிய நாளாக கன்னிமாரா நூலகத்தின் 125-வது ஆண்டை நினைவுகூர்வோம்.

Comment

Successfully posted