2018 டாப்-10 கேஜெட்டுகள்

Dec 26, 2018 10:41 PM 399

1. OnePlus 6T - கைபேசி

2018ல் மொத்த செல்ஃபோன் சந்தையையும் புரட்டிப் போட்டது ‘ஒன் பிளஸ்’ என்ற சீன நிறுவனம். இதன் ’ஒன் பிளஸ் 6டி’ மாடல் கைபேசிதான் 2018ல் சாமானிய மக்களையும் சென்று சேர்ந்த ஹைடெக் கேட்ஜெட். 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. இன்பில்டு மெமரி உள்ளிட்ட வசதிகளோடு 6.28 இன்ச் டிஸ்பிளேவில் வந்த இந்த கைபேசியானது கணினியை விடவும் திறனோடு செயலாற்றியதாகப் பாராட்டப்பட்டது.

2. Apple Watch Series 4 - வாட்ச்

ஸ்மார்ட் போன்களின் ராஜாவாகத் திகழ்ந்த ஆப்பிள் நிறுவனம் 2018ல் அசத்தியதோ வாட்சுகள் மூலம்தான். ‘ஆப்பிள் 4 வாட்ச்’ சாதாரண வாட்சாக இல்லாமல் ஒரு காலண்டராகவும், டைரியாகவும் செயலாற்றியது. செல்போன்களை எங்காவது மறந்து வைத்துத் தேடுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதயத்துடிப்பை அறிதல் போன்ற மருத்துவ வசதிகள் இதன் சிறப்பம்சம்.

3. Nikon Z6 - கேமரா

செல்ஃபோன்களில் என்னதான் நவீன கேமராக்கள் வந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் கேமராக்களின் மீதான ஈர்ப்பும் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது. கேமரா குறைவான எடையில் இருக்க வேண்டும், ஆனால் அது குறைந்த வெளிச்சத்திலும் அதிக ஐ.எஸ்.ஓ.வோடு புகைப்படம் எடுக்க வேண்டும் - என்ற நிபந்தனைகளை நிறைவேற்றும் விதமாக வெளிவந்த ’நிக்கான் இசட்6’ கேமராதான் 2018ல் பெரும்பாலான மக்களின் உள்ளம் கவர்ந்த கேமரா. கேமரா பிரியர்கள் டி.எஸ்.எல்.ஆர். ரகங்களை விட்டு மிரர்லெஸ் ரகங்களை நோக்கி நகரும் வேகத்தை அதிகப்படுத்துகிறது இதன் வெற்றி.

4. AMAZON ECHO - கட்டளை சாதனம்

உருளை வடிவத்தில் உங்களுக்குக் கிடைத்த அடிமை பூதம்தான் அமேசான் எக்கோ. அலெக்ஸா மூலம் உங்களிடம் பேசும் இந்த கேட்ஜெட்டின் மூலம் நீங்கள் உங்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை அமேசானில் இருந்து பெறலாம். அமேசான் எக்கோ சேவை மற்றும் விற்பனைத்துறைகளில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

5. Samsung Q9FN QLED - தொலைக்காட்சி

2018ல் சந்தைக்கு வந்த நவீன டிவிக்களில் சிறந்ததாகப் பார்க்கப்படுவது சாம்சங்கின் 65 இன்ச் ’க்யூ.நயன்.எஃப்.என். கியூ.எல்.ஈ.டி.’ டிவி. இதன் புதிய தொழில்நுட்பங்கள் காட்சிகளின் வண்ணங்களைத் துல்லியமாக வெளிப்படுத்துவதால் வரவேற்பறைகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது இந்த டி.வி.

6. Huawei MateBook X Pro - லேப் டாப்

துல்லியமான ஸ்கிரீன், தொய்வில்லாத செயல்தரம், நீடித்த பேட்டரி, அழகான வடிவமைப்பு என லேபாட்ப் வாங்குபவர்களின் கனவாக வெளிவந்து வெற்றி பெற்றிருக்கிறது ஃபாவேயின் ’மேட்புக் எக்ஸ் புரோ’. விலைக்கும் அதிகமான தரம் என்பது இதன் வெற்றிச் சூத்திரமாகப் பார்க்கப்படுகிறது.

7. iPad Pro 11 - டேப்லெட்

468 கிராம் எடையோடும் 11இன்ச் ஸ்கிரீனோடும் வெளிவந்துள்ள ’ஐபேட் புரோ லெவன்’ டேப்லெட்டானது பலவகைகளில் லாப்டாப்களையே விஞ்சக்கூடியதாக உள்ளது. இதனுடன் கொடுக்கப்பட்டுள்ள கீபோர்டை இணைத்துவிட்டால், டச் ஸ்கிரீனை முழுமையான ஸ்கிரீனாகப் பயன்படுத்தலாம். ’விலை ஒரு பிரச்னை இல்லை, செயல்திறன்தான் முக்கியம்’ என்பவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த டேப்லெட்.

8. PS4 Pro - வீடியோ கேம்

வீடியோ கேம் விளையாடுபவர்களின் உலகம் தனியானது. அந்தத் தனிக்காட்டின் சிங்கம் ‘பிளே ஸ்டேஷன்’ கேட்ஜெட்டுகள். அவற்றின் வரிசையில் 2018ல் வெளி வந்து பெரும் வெற்றி பெற்றிருக்கிறது ’பி.எஸ்.ஃபோர்.புரோ.’ சந்தையின் முதல் ’ஃபோர்கே ஹெச்.டி.ஆர். சோனி கன்சோ’லாக வெளிவந்த இந்த கேட்ஜெட்டின் மூலம் சோனி நிறுவனம் மைக்ரோ சாஃடின் வீடியோ கேம் வரிசையான ‘எக்ஸ் பாக்ஸ்’களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

9. Kindle Paperwhite - ஈ ரீடர்

புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது - என்ற குற்றச்சாட்டுக்கு பதிலடியாக, தாள்களில் இல்லாமல் கேட்ஜெட்களில் புத்தகங்களைப் படிக்கும் பழக்கமும் அதிகரித்துதான் வருகிறது. இணையத்தின் உதவியோடு எண்ணற்ற புத்தகங்களைப் படிக்கும் ‘ஈ - ரீடர்’ வகை கேட்ஜெட்களின் வரிசையில் வாட்டர் புரூஃப்பாக வெளிவந்து கவனம் ஈர்த்திருக்கிறது அமேசானின் ‘கிண்டில் பேப்பர்ஒயிட்’. 2018ல் வந்த ஒரே ஈ-ரீடர் இது என்பது இதன் தனிப்பெருமை.

10. Moov Now - ஹெல்த் டிராக்கர்

ஹெல்த் டிராக்கர்கள் எல்லாமே விலை அதிகமானவை, அதிக தொழில்நுட்பங்கள் உள்ளதால் பயன்படுத்த சிக்கலானவை - என்ற எண்ணத்திற்கு மாற்றாக வந்துள்ளது இந்த ‘மூவ் நவ்’ ஹெல்த் டிராக்கர். செல்ஃபோனோடு இணைக்கப்பட்டுள்ள இதில் ஸ்கிரீனே இல்லை, 6 மாதங்களுக்கு இதன் பேட்டரி நிலைக்கும். இதனால் வயதானவர்கள் கூட தங்கள் நடை தூரம், உறக்க நேரம் உள்ளிட்டவற்றை எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.

 

Comment

Successfully posted