கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய 3 கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!

Mar 07, 2020 07:32 PM 1572

ஆந்திரபிரதேச மாநிலத்தில், தன் அறை தோழருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக பொய் செய்தியை பரப்பிய மூன்று மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் பாதிப்பு தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு தன் நண்பருக்கு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரப்பி தங்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிக்கொண்டுள்ளனர் மூன்று மாணவர்கள். ஆந்திர பிரதேச மாநிலம் கடப்பாவில் இயங்கி வருகிறது குளோபல் பொறியியல் கல்லூரி. அங்கு மெக்கானிக்கல் பிரிவில், கணேஷ், ராம், வருன் ஆகிய மூவரும் மூன்றாமாண்டு படித்துவருகின்றனர். பிரபல செய்தி தொலைக்காட்சியில் வெளியாகும் பிரேக்கிங் கார்டை எடுத்த அவர்கள், அதில் “ஷ்ரவன் என்ற மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. கடப்பாவில் இயங்கிவரும் குளோபல் பொறியியல் கல்லூரியில் பதற்றம் நிலவுகிறது.” என்று மார்ஃபிங் செய்து அதை கல்லூரி நண்பர்கள் மற்றும் வாட்சப் குழுக்களில் பரப்பியுள்ளனர்.

இந்த கார்டில் குறிப்பிட்ட ஷ்ரவன் என்பவர், வந்தந்தியை பரப்பியவர்களில் ஒருவரது அறை நண்பராவார். அதோடு, அவர்களில் மற்றொரு நபர், சென்னை லொயோலா கல்லூரியில் படிக்கும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக பொய் செய்தி ஒன்றை பரப்பியுள்ளார்.  மாணவர்கள் மூவரும் ஜாலிக்காக செய்த இந்த வேலையால், கொரோனா பீதி கல்லூரி மாணவர்கள் மத்தியில் பரவத்தொடங்கியதையடுத்து கல்லூரியில் பதட்டம் ஏற்பட்டது. இந்த விவகாரம் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியவர, மூவரையும் கல்லூரி மற்றும் ஹாஸ்டல் ஆகியவற்றிலிருந்து தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அந்த செய்தியில் குறிப்பிடப்பட்ட ஷ்ரவன் என்ற மாணவரையும் தற்காலிக நீக்கம் செய்த கல்லூரி நிர்வாகம், பின்னர் அவர் மீது தவறு இல்லை என்பதை அறிந்து அதனை திரும்பப்பெற்றது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை மிரட்டியதையடுத்து கல்லூரியின் முதல்வர், காவல்துறையினரிடம் மூவர் மீதும் புகாரளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட சென்னூர் காவல்துறையினர் மூவர் மீதும், இந்திய தண்டனைச் சட்டம் 505 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

கொரோனா வைரஸ் பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொய்யான தகவல்களை பரப்பக்கூடாது என்றும் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Comment

Successfully posted