தமிழக பேரிடர் மீட்பு படையினை வலுப்படுத்த 38.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Sep 23, 2019 07:23 PM 291

தமிழக பேரிடர் மீட்பு படையினை வலுப்படுத்த 38 கோடியே 52 லட்சம் ஒதுக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி. விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை காலங்களில் கீழே விழும் மரங்களை உடனடியாக அகற்ற தேவையான ஆட்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் நீரை வெளியேற்ற மின் மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் தொற்று நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் போதுமான மருந்துகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக்கடைகளில் இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பேரிடர் காலங்களில் கண்காணிப்பு மற்றும் அறிவுரைகள் வழங்க நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் அக்டோபர் திங்கள் முதல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. பேரிடர் மீட்பு படையினை வலுப்படுத்தவும், உபகரணங்கள் மற்றும் சிறப்பு கருவிகள் வாங்கவும் 38 கோடியே 52 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Comment

Successfully posted