அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

Jul 09, 2021 10:25 PM 823

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை, தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 முக்கிய தீர்மானங்கள் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

 

தமிழ்நாட்டின் இதயத்துடிப்பான காவிரி நதிநீர் பங்கீட்டில் மாநிலத்தின் உரிமையை காக்க வேண்டும்

தமிழ்நாட்டின் இதயத்துடிப்பான காவிரி நதிநீர் பங்கீட்டில் மாநிலத்தின் உரிமையை காக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள அதிமுக, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் என கண்டித்துள்ளது.

அணை கட்டும் முயற்சிகளை தடுக்க அதிமுக ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை போல, தற்போதைய திமுக அரசும் விரைந்தும், துணிந்தும், விவேகத்துடனும் செயல்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

கடந்த திமுக ஆட்சிக்காலங்களில் தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கத் தவறியதுபோல அல்லாமல், இப்போதாவது உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அதிமுக வலியுறுத்தியுள்ளது.

 

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துக

மக்கள் படும் துயரங்களை மனதிற்கொண்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அதிமுக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

விவசாய இடுபொருட்கள் விலை உயர்வு, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, மருத்துவ தேவைக்கான கட்டண உயர்வு போன்றவற்றால் தமிழ்நாட்டு மக்கள் பெரும் துயரை எதிர்கொண்டு வருவதாக அதிமுக தலைமை வேதனை தெரிவித்துள்ளது.

 


பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைக்க மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ள அதிமுக, ஆட்சிக்கு வந்தவுடன் இவற்றின் விலையை குறைப்பதாக வாக்குறுதி அளித்த திமுக, மக்களை ஏமாற்றாமல் உடனடியாக அவற்றை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

திமுக கூறியபடி பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் விலை குறைக்காததை கண்டித்தும், சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்காததை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை நிறைவேற்றாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் அதிமுக தலைமை எச்சரித்துள்ளது.

 

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு கண்டனம்

தேர்தல் அறிக்கையில் நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளை வாரி வழங்கிய திமுக, ஆட்சிக்கு வந்தவுடன் அதுகுறித்து வாய் திறக்காமல் இருப்பதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கான திட்டங்கள், பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ஓரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென அதிமுக வலியுறுத்தியுள்ளது.

 

 ரூ.1,000 வழங்காவிட்டால் போராட்டம்

அதேபோல், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டுமென அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இல்லையென்றால் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடும், தாய்மார்களின் பங்கேற்போடும் மாபெரும் போரட்டம் நடத்தப்படும் என அதிமுக எச்சரித்துள்ளது.

முதியோர் உதவித்தொகையை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்துவது, மகளிர் சுய உதவிக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்புகளையும் நிறைவேற்ற வேண்டுமென அதிமுக வலியுறுத்தியுள்ளது.

 

நெல் கொள்முதலில் அலட்சியம் வேண்டாம்

விவசாயிகள் விளைவித்த நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி விரயம் செய்யும் திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக, நெல் கொள்முதல் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

Comment

Successfully posted