வாணியம்பாடி சமூக ஆர்வலர் கொலையில் 6 பேர் சரண்

Sep 14, 2021 05:07 PM 1745

வாணியம்பாடியில், சமூக ஆர்வலர் கொலை வழக்கு தொடர்பாக, தஞ்சாவூர் நீதிமன்றத்தில் 6 பேர் சரணடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், ம.ஜ.க முன்னாள் நிர்வாகியுமான வாசீம் அக்ரம் என்பவர், கடந்த 10ஆம் தேதி மாலை காரில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலைக் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேர் அன்று இரவே காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியில் போலீசாரின் வாகன தணிக்கையில் சிக்கினர். விசாரணையில், டீல் இம்தியாஸ் என்பவரின் கிடங்கில் கஞ்சா பதுக்கி வைத்தது குறித்து, வாசீம் அக்ரம் போலீசாருக்கு தகவல் அளித்ததன் எதிரொலியாக கொலை நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, டீல் இம்தியாஸ் உள்பட, கொலைக் கும்பலைச் சேர்ந்தவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கொலை தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார், அகஸ்டின், பிரவின்குமார், சத்யா, முனீஸ்வரன், அஜய் ஆகிய 6 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Comment

Successfully posted