6 மாதங்களாக சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் - 7 பேர் போக்சோவில் கைது!

Oct 14, 2020 08:21 AM 1582

கடந்த 6 மாதங்களாக இரண்டு சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முதியவர் உள்பட 7 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள, அணைப்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனியம்மாள். இவரது கணவர் முத்துசாமி இறந்துவிட்டதால், பழனியம்மாள் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும் நேரத்தில், 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு மகள்கள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் முத்துசாமி, சிவா, சண்முகம் உள்ளிட்ட 7 பேர், சிறுமிகளை மிரட்டி, பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளனர்.

கொடூரர்களின் கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியாமலும், நடப்பதை வெளியில் கூற முடியாமலும் சிறுமிகள் மனதிற்குள்ளேயே நரக வேதனையை அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில், சிறுமிகளின் துயரத்தை அறிந்த சிலர், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.

அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த ராசிபுரம் போலீஸார், சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 75வயது முதியவர் முத்துசாமி உள்பட 7 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிறுமிகளை மேலும் சிலர் பாலியல் கொடுமை செய்திருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

Comment

Successfully posted