மகேந்திரகிரியில் விண்வெளி மையத்திலிருந்து நெல்லை மருத்துவக் கல்லூரிக்கு எட்டாயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன்

May 07, 2021 10:10 AM 1621

மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து எட்டாயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 800 படுக்கைகள் உள்பட ஆயிரத்து 240 படுக்கை வசதிகள் உள்ளன. இதே போல், 11 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக 450 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அங்கு புதிய கொரோனா நோயாளிகள் அனுமதிப்பதில்லை.

இதனால், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டன. ஆக்ஸிஜனின் தேவை பல மடங்கு உயர்ந்ததை அடுத்து தமிழ்நாடு மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் மூலமாக மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள 8 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டு கொள்கலனில் நிரப்பப்பட்டது.

இதில் 6 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

Comment

Successfully posted