உலக தூக்க தினமான இன்று தூக்கத்தின் அவசியம் குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு

Mar 16, 2019 12:43 PM 140

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவு எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல் தூக்கமும் அவசியம்தான்... உலக தூக்க தினமான இன்று தூக்கத்தின் அவசியம் குறித்த ஒரு சிறப்பு தொகுப்பை இப்போது பார்க்கலாம்....

ஆண்டுதோரும் மார்ச் மாதம் 16 ஆம் தேதி உலக தூக்க தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு மனிதன் சந்தோஷமாக வாழ தேவை நிம்மதி. நிம்மதியை தேடி உலகமெங்கும் சுற்றித்திரியும் மனிதர்களின் பெயர் பட்டியலில், நான் தான் முதலிடம் என்றே பலருக்குத் தோன்றும். ஏனெனில் நிம்மதி என்ற வார்தையை முழுமையாக உணர்ந்தவர்கள் யாரும் இருக்க வாய்பில்லை என்றே கூறலாம். தேடல்கள்... தேவைகள்... வசதி வாய்ப்புக்கள் என ஒவ்வொருவரும் சாகும்வரை ஏதோ ஒன்றை நோக்கி பயணித்து கொண்டுதான் இருக்கிறோம்.

வாழும் இந்த இடைவெளியில் நாம் அவற்றிற்காக தூக்கத்தை தொலைத்து விட்டோம். நிம்மதி கிடைக்க சிறந்த வழி நம்மிடம்தான் உள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? உணவு, உடை, வசதி வாய்ப்புக்கள் என அனைத்தையும் தாண்டி மனிதனுக்கு மிக முக்கியமானது தூக்கம்தான். நல்ல தூக்கம் உள்ள மனிதன்தான் உலகில் மிகவும் நிம்மதியானவன்... மகிழ்ச்சியானவன்.

ஆனால், இந்த நவீன காலகட்டத்தில் கைபேசி, இன்டெர்நெட், சமூக வலைத்தளங்கள் என மூழ்கிப்போன மனிதர்களின் நிலை தூக்கத்தை விற்று கட்டில் வாங்கும் கதையாக மாறிவிட்டது. இந்தியாவில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இன்சோம்னியா எனும் தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பலருக்கு தூக்கமின்மை நோய் இருப்பது தெரியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகி பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். வீட்டில் உள்ளவர்களுடன் தேவையின்றி கோபப்படுவது... அலுவலகத்தில் கவனம் சிதறுவது... என விளைவுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தூக்கமின்மையின் அறிகுறியான குறட்டை விடுதல் காரணமாக விவாகரத்துகளும் நடைபெறுகின்றன.

முடிவா என்னதா சொல்லுறீங்கன்னு தூக்கவியல் நிபுணர்களைக் கேட்டால்... நீங்க ஒன்னும் பண்ண வேணாம் தூங்கினா மட்டும் போதும்னு சொல்றாங்க.

மேலும் தூக்கம் வராதவர்கள் இரவு தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பு குளிக்க வேண்டும் எனக்கூறும் தூக்கவியல் நிபுணர்கள், பளிச்சென ஒளிரும் லைட்டுகளை எரிய வைத்துவிட்டு உறங்கினால் ஆழ்ந்த உறக்கம் வராது எனவும் தெரிவிக்கின்றனர். யோகாசனம் செய்வது, தூங்க செல்வதற்கு முன்பு இதமான இசை கேட்பது, புத்தகம் படிப்பது உள்ளிட்டவை நல்ல தூக்கத்திற்கு உதவியாக இருக்கும். இருப்பினும் தூக்கம் இல்லை என நினைப்பவர்கள் கட்டாயம் மனநல நிபுணர்களை அணுகி ஆலோசனை கேட்க வேண்டும்.

உலக தூக்க தினமான இன்று தூக்கத்தின் மகத்துவத்தை உணர்ந்து, நிம்மதியான தூக்கமே, துக்கமில்லாத வாழ்விற்கு அடிப்படை என்பதை உணர்ந்து கொள்வோம்.

Comment

Successfully posted