பெண்ணைக் காப்பாற்ற உயிர் துறந்த இளைஞர்

Jan 13, 2020 08:57 PM 460

பூமியில் தினமும் பிறப்பும் இறப்பும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதில் சிலருடைய இறப்பு மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறுகிறது. அவ்வாறு சரித்தரத்தில் இடம்பெற்ற கிராமத்து இளைஞர் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் அன்று மாலை வழக்கம் போல் தங்களுடைய பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை வேகமாக கடந்து சென்ற ஆட்டோ ஒன்றிலிருந்து பெண்ணின் அபயக் குரல் கேட்டது. ஏதோ விபரீதம் நடக்கிறது என்பதை உணர்ந்த இளைஞர்கள் உடனடியாக தங்கள் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு ஆட்டோவை வேகமாக துரத்திச் சென்றனர். அதற்குள் ஓடிக் கொண்டிருந்த ஆட்டோவிலிருந்த பெண் கீழே குதித்தார். சிறுகாயங்களுடன் அவர் தப்பித்து விட ஆட்டோவை இளைஞர்கள் விடாமல் துரத்திச் சென்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர், இருசக்கர வாகனத்தை கீழே இடித்து தள்ளினார். இதில் இருசக்கர வாகனம் நிலைகுலைந்து கீழே விழுந்ததில் யாகேஷ் என்ற 22 வயது இளைஞர் படுகாயமடைந்தார். மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உடன் சென்ற இளைஞர்களான பிராங்க்ளின், எஸ்தர் பிரேம்குமார்,  வினித் மற்றும் சார்லிபன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற காவல்துறையினரின் விசாரணையின் போது தான் ஆட்டோ ஓட்டுநரின் கயமைத்தனம் வெளிச்சத்திற்கு வந்தது. கொண்டஞ்சேரியில் ஆட்டோவில் ஏறிய இளம் பெண் தன்னை நரசிங்கபுரம் என்ற இடத்திற்கு செல்ல வேண்டுமென கூறியுள்ளார். அந்தப் பெண் தனியாக வந்திருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ஆட்டோ டிரைவர் ரூட்டை மாற்றி வண்டியை இயக்கியுள்ளார். தான் ஆபத்திலிருப்பதை அறிந்து அந்தப் பெண் சத்தமிட்டுள்ளார்.

யாரோ ஒருவருக்கு ஆபத்து எனக் கருதாமல் விரைந்து செயல்பட்டு காப்பாற்ற முயற்சித்த இளைஞர்கள் தங்கள் நண்பரில் ஒருவரை இழந்துள்ளனர்.

காவல்துறையினர் அந்த ஆட்டோ டிரைவரைக் கைது செய்து சிறையிலடைத்தனர். யாகேஷ் குறித்து தகவலறிந்த முதலமைச்சர் பழனிசாமி அவரது குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என சட்டசபையில் அறிவித்தார். மேலும் படுகாயமடைந்த பிராங்களினுக்கு 2 லட்ச ரூபாய் நிவாரண நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசை ஆசையாய் வளர்த்த மகன் பெண்ணைக் காப்பாற்ற முயற்சி செய்து உயிர்விட்டதை பெருமையாக கருதினாலும் மகனின் இழப்பு வேதனை தருவதாக தெரிவித்தனர் யாகேஷின் பெற்றோர்...

ஆபத்தில் இருந்த பெண்ணைக் காப்பாற்ற முயன்று உயிரை விட்டவர்கள் குறித்து கதைகள் மற்றும் புராணங்களில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த இத்தலைமுறைக்கு தானே உதாரணமாகி உயிரைவிட்ட யாகேஷின் பெயரும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

Comment

Successfully posted