திமுக வேட்பாளர் மிரட்டல் காரணமாக மனஉளைச்சலில் அதிமுக வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை

Feb 10, 2022 02:59 PM 3064

திமுக வேட்பாளரின் மிரட்டல் காரணமாக, காஞ்சிபுரம் மாநகராட்சி 36ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாநகராட்சி 36ஆவது வார்டில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட ஜானகிராமனுக்கும், திமுக சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசனின் உறவினர் சுப்புராயனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதனால், அதிமுக வேட்பாளர் ஜானகிராமனுக்கு திமுகவில் இருந்து பல்வேறு அழுத்தங்களும், கொலை மிரட்டலும் வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் ஆகியோரிடம் ஜானகிராமன் கூறியிருந்தார்.

திமுக வேட்பாளரின் மிரட்டல் காரணமாக மன உளைச்சலில் இருந்த அதிமுக வேட்பாளர் ஜானகிராமன், நேற்றிரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். ஜானகிராமன் மறைவுக்கு நீதி கேட்டு அதிமுக நிர்வாகிகள், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் போராட்டத்தில், மாவட்ட கழக செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், காஞ்சி பன்னீர்செல்வம், அம்மா பேரவை கழக செயலாளர் கே.யு.எஸ். சோமசுந்தரம், நகர செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக வேட்பாளர் தற்கொலைக்கு காரணமான அமைச்சர் தா.மோ.அன்பரசனின் உறவினரும், திமுக வேட்பாளருமான சுப்புராயனை கைது செய்யக் கோரி அதிமுக நிர்வாகிகள் முழக்கமிட்டனர்.

Comment

Successfully posted